இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்?

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் திடீரென காலமானதால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவிக்கும், அதன் எதிர்காலத்திற்கும் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நிலைநிறுத்திய சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிளவுபட்டதைப் போல, தற்போதும் அந்தக் கட்சியில் பிளவு ஏற்படுமா என்ற எழுந்துள்ளது. இந்த வெற்றிடத்தைப் பிடிப்பதற்கு தேசிய பெரும்பான்மை கட்சிகள் முயற்சிக்கக் கூடும் என்ற நிலையும் உருவாகியுள்ளது.

ஆகவே மலையகத்தில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்றின் வீழ்ச்சி என்பது பெரும்பான்மையினக் கட்சியின் வளர்ச்சியாக பார்க்கப்படுவதால், இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடுத்த தலைமை குறித்து என்ன நடக்கும், யார் தலைமை ஏற்பார்கள் என்ற கேள்விகள் தொடர்கின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் தொண்டமான் என்ற பெயரை அடிப்படையாக வைத்து இயங்கிவந்த கட்சி என்பதால் எதிர்காலத்திலும் அந்தப் பெயரைத் தவிர்த்து இன்னுமொருவர் தலைமை ஏற்பதை, இ.தொ.கா. ஆதரவாளர்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்வார்கள், விமர்சிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்படியெனில் தொண்டமான் என்ற பெயரில் கட்சியின் அடுத்த தலைமையை ஏற்பதற்கு யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்ததால் இரண்டு பெயர்கள் மட்டுமே தற்போதைக்கு இருக்கின்றன. அதில் ஒன்று செந்தில் தொண்டமான், இரண்டாவது ஜீவன் தொண்டமான்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையை ஏற்பதற்கு இவர்களுக்கு இருக்கும் குறை, நிறைகளைப் பார்க்க வேண்டும்.

செந்தில் – ஜீவன்

தொண்டமான் என்ற பெயர் இவர்கள் இருவருக்கும் எவ்வாறு வந்தது.
சௌமியமூர்த்தி தொண்டமானின் பேத்தியின் மகன் செந்தில் தொண்டமான். சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனின் மகன் ஜீவன் தொண்டமான்.

எனவே, முன்னதாக குறிப்பிட்டதைப் போல இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆளுமையாகத் திகழ்ந்த சௌமியமூர்த்தி தொண்டமான் வழியில் வந்த இருவருக்கும் தற்போது இதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

செந்தில் தொண்டமான்

செந்தில் தொண்டமானை எடுத்துக் கொண்டால், அவர் 2009 ஆம் ஆண்டு முதல் இ.தொ.காவுடன் நெருக்கமாக செயற்பட தொடங்கியுள்ளார். 2012ஆம் ஆண்டுமுதல் அரசியல் களத்தில் பணியாற்றியுள்ளார். ஆறுமுகன் தொண்டமான் செந்திலுக்கு சில இலக்குகளை வழங்கியிருந்தார்.

குறிப்பாக கேகாலை, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய களங்களைக் குறிப்பிடலாம். சுமார் 50 வருடங்கள் தமிழ்ப் பிரதிநிதி இல்லாத மாவட்டத்தில் முதன்முறையாக மாகாண சபைப் பிரநிதிதியொருவரை பெறுவதற்கு செந்தில் பணியாற்றியுள்ளார். அதேபோல், கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் செந்தில் தொண்டமானின் தலைமையின் கீழ் பெறப்பட்டது.

அதன்பின்னர், பதுளை மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட செந்தில் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியில் அதுவரை போட்டியிட்டு இரண்டு ஆசனங்களைப் பெற்றுவந்த இ.தொ.கா.விற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு மூன்று ஆசனங்களைப் பெறுவதற்கு வழி ஏற்படுத்தினார். அப்போது ஊவாவின் முதலமைச்சரை தீர்மானிக்கும் பலம் இ.தொ.கா.விடம் காணப்பட்டது.

அத்துடன், 2009ஆம் ஆண்டு பதுளையில் 9800 ஆக இருந்த இ.தொ.கா. உறுப்பினர்களை தற்போது 24,000ஆக அதிகரித்துள்ளார். சௌமியமூர்த்தி தொண்டமானின் மகன் இராமநாதன் தொண்டமான் உள்ளிட்ட பலரும் மாகாண சபை அமைச்சர்களாக இருந்துள்ளனர். எனினும், மலையக வரலாற்றில் மாகாண முதலமைச்சராக ஒருவர் பதவி வகிக்க முடியும் என்பதை நிருபிக்கும் வகையில் செந்தில் தொண்டமான் தன்னை உருவாக்கிக்கொண்டார். 2009ஆம் ஆண்டு முதல் ஆறுமுகன் தொண்டமானின் நேரடி வழிகாட்டலில் அரசியல் பயிற்றுவிக்கப்பட்டு, தொண்டமானின் குடும்பத்தில் வளர்ந்த ஒருவராகவே செந்தில் தொண்டமான் காணப்படுகிறார்

ஆனால், செந்தில் தொண்டமான் தலைமை ஏற்பதில் இருக்கும் பாதகம் அவர் பதுளையில் இருப்பதாகும். பதுளையில் இருந்துகொண்டு, இ.தொ.கா தலைமையை இயக்குவது என்பது இப்போதைக்கு அவருக்கு பாதமாக இருக்கிறது.

ஜீவன் தொண்டமான்

அப்படியெனில், ஜீவன் தொண்டமான் பக்கம் இருக்கும் பலம், அவர் நுவரெலியாவை மையப்படுத்தி இருப்பது தலைமை ஏற்பதற்கு இருக்கும் முக்கிய பலமாக இருக்கிறது. அத்துடன், ஆறுமுகன் தொண்டமானின் ஓரே வாரிசு என்பது இ.தொ.கா. ஆதரவாளர் மத்தியில் அவருக்கு இருக்கும் சாதகமாகும்.

அத்துடன் கடந்த காலங்களில் ஆறுமுகன் தொண்டமான் எடுத்த பல அரசியல் முடிவுகளின்போது ஜீவன் அருகில் இருந்துள்ளார். சில முடிவுகளில் ஜீவனின் பங்களிப்பும் இருந்ததாக இ.தொ.கா தரப்புகள் கூறியிருந்தன. அத்துடன், கடந்த இரண்டு வருடங்களாக இளைஞர் அணியை இயங்கியமை, இளைஞர்களை தன்வசம் வைத்திருந்தமை போன்ற விடயங்கள் இருக்கின்றன.

இருந்தாலும் கூட, ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.கா. தலைமையை ஏற்றபோது இருந்த அரசியல் அனுபவம், ஜீவனிடம் இல்லை என்பதால், இ.தொ.கா. என்ற ஒரு பழம்பெறும் இயக்கத்தை பிளவுபடாமல் கொண்டு செல்வதற்கான இயலுமை ஜீவனிடம் உள்ளதா என்பது கேள்வியே.

இவர்கள் இருவரைத் தவிர இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் வேறு எந்தத் தலைமையும் தகுதியுடன் இல்லையா என்ற கேள்வி பெரும்பாலானோர் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும் கூட, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கு தொண்டமான் என்ற பெயரில் இருக்கும் வசீகரம், வேறொரு தலைமைக்கு இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது. வேறொரு தலைமையின் தெரிவு என்பது இ.தொ.காவில் பிளவுகளை ஏற்படுத்தும் என்பதும் கடந்தகால வரலாற்றுப் பாடமாக இருக்கிறது.

எனவே, சௌமியமூர்த்தி தொண்டமானின் வாரிசுகளாக இருக்கும் செந்தில், ஜீவன் ஆகியோர் இந்த இ.தொ.கா என்ற இயக்கத்தை எவ்வாறு இணைந்து முன்நோக்கி நகர்த்தப் போகிறார்கள், அதனை பெரும்பான்மை தேசிய கட்சிகள் எவ்வாறு கையாளப் போகின்றன என்ற கேள்விகளுக்கு ஜீவன், செந்தில் ஆகியோரின் அடுத்த நகர்வுகள் பதில்சொல்லும்.

இருவரும் இணைந்து பயணிப்பது மட்டுமே இ.தொ.காவை அடுத்த 30 – 40 வருடங்களுக்கு இன்னும் பலமான இயக்கமாக முன்நகர்த்துவதற்கு அச்சாணியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *