பொன்மகள் வந்தாள்: தேவதையைக் கண்டெடுத்தவளின் கதை!

திருமணத்துக்குப் பிறகான ஒரு நடிகையின் திரை வாழ்க்கை, ரசிகர்களின் மனதில் ஒரு தேவதையைப் புதிதாகச் சிறகடிக்கச் செய்ய வேண்டும். அதே நேரத்தில், திரையில் வெறுமனே தேவதையைப் போல உலா வரவும் கூடாது.
இப்படியொரு சவாலை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காகவே ஜோதிகாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ‘பொன்மகள் வந்தாள்’ அவரது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகி இருக்கிறது.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், இது ரசிகர்களுக்கான பாடமாகவும் ஆகியிருக்கும். இயக்குநர் பிரடெரிக் அதை நழுவ விட்டிருக்கிறார்.
படத்தின் கதை, நம் அரிதாகச் செய்தித்தாள்களில் காணும் தலைப்புச் செய்திகளை ஒத்தது.

2004-ஆம் ஆண்டு ஊட்டியில் இளஞ்சிறுமிகள் தொடர்ச்சியாகக் காணாமல் போகின்றனர். ஒருநாள் ஒரு பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்லும் பெண்மணி, அவரைத் தாக்கும் இரண்டு இளைஞர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்.
அடுத்த நாள், அந்த பெண்மணி குழந்தைகளைக் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்பவர் என்றும், அவரைக் கைது செய்த போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் என்றும் அந்த வழக்கு முடிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஜோதி என்பதும், அவர் ஜெய்ப்பூரில் இருந்து ஊட்டி வந்தவர் என்பதும், அவருக்கு ஒரு மகள் இருந்தார் என்பதும் மட்டுமே அனைவரும் அறிந்த உண்மையாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து, பெத்துராஜும் (பாக்யராஜ்) அவரது மகள் வெண்பாவும் (ஜோதிகா) அந்த வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று மனு செய்கின்றனர்.
நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது, ஜோதி யார் என்ற உண்மை மெதுவாகத் தெரியத் தொடங்குகிறது.

ஜோதியால் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? காணாமல் போன சிறுமிகள் கொலையானது எப்படி என்ற கேள்விகளுக்கான பதில்கள் வெட்ட வெளிச்சமாவதுடன் படம் முடிவடைகிறது.
நடந்து முடிந்த கொலையிலேயே துப்பு கிடைக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திணறும்போது, தடயங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைச் சிக்க வைப்பதென்பது குதிரைக் கொம்பு.
அதனைச் சாத்தியப்படுத்த தவறியிருக்கிறது பிரடெரிக்கின் திரைக்கதை.

தந்தையின் பொதுநல வழக்குகளுக்கு வலு சேர்க்கும் மகளாக, ஜோதிகா பைக்கில் பறந்து வரும் முதல் காட்சியே ஆக்‌ஷன் மீதிருக்கும் காதலைக் காட்டுகிறது.
அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, நீதிமன்றக் காட்சிகளில் அவரது வேகம் வெளிப்படவில்லை.

வழக்கில் தொடர்புடைய ஒரே சாட்சியான சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் இறந்துவிட்டார் என்பதை அறிந்து வேதனைப்படும் காட்சியில், குண்டு வீசியெறியும் வீராங்கனையின் ஆவேசத்தை வெளிக்காட்டத் தவறியிருக்கிறார்.
பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் தவிர்த்து பிரதாப் போத்தன், தியாகராஜனும் படத்தில் நடித்திருக்கின்றனர். ஐந்து பேருமே இயக்குநர்கள் என்பதால், கதையில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து வந்து போகின்றனர்.
தியாகராஜன் தரும் பரிசுப்பொருளை பிரதாப் போத்தன் ஏற்பதற்கான காரணத்தைத் திரையில் வேறு ஏதேனும் ஒரு இடத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். இதனால், பிரதாப்பின் நீதிபதி பாத்திரம் நீதிநெறி தவறியதா, இல்லையா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டியிருக்கலாம்.
வழக்கை விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் (சுப்பு பஞ்சு), ஜோதியின் பின்னணியை விசாரிக்காமல் அவசரமாக வழக்கை ஜோடித்து விட்டார் என்பதன் மீதே முழு திரைக்கதையும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் சுப்பு பஞ்சுவையும் தியாகராஜனையும் ஒரு சில நிமிடங்களே கண்ணில் காட்டுகிறது.
இந்த முரண் தான் படத்தோடு ஒட்டவிடாமல் நம்மைத் தடுக்கிறது.

அதேபோல, இங்கு நீங்கள் சிரிக்கலாம் என்று பலகையில் எழுதாத குறையாக அமைக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளைத் தவிர்த்து விட்டு திரைக்கதையோட்டத்தில் சில ஒன்லைனர்களை செருகியிருக்கலாமே என்று ஆதங்கப்பட வைக்கிறது.
கிரேன் மனோகர், டி.எஸ்.ஆர், வினோதினி, கஜராஜ், ஜீவா ரவி, செம்மலர் அன்னம் உட்படப் பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
கவுரவத் தோற்றத்தில் வித்யா பிரதீப் வந்து போகிறார். அவர்தான் சக்தி ஜோதி என்பது கிளைமேக்ஸில் கோடிட்டுக் கிழித்தாற்போலச் சொல்லப்படுகிறது?!

ராம்ஜியின் ஒளிப்பதிவு நீலகிரி மலைகளின் இதத்தைப் பார்வைக்கு கடத்துகிறது. முதல் 20 நிமிடங்களில் கலவையான உணர்வு தோன்றுவதைத் தடுக்கத் தவறியிருக்கிறது ரூபனின் படத்தொகுப்பு.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு அழுத்தம் கூட்டுகிறது.
அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது ‘பொன்மகள் வந்தாள்’. அதற்காகவே, சில ரத்தம் தோய்ந்த காட்சிகளைக் காட்டியிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையே கதையின் அடிப்படை என்றாலும், வன்புணர்வு விவரணைகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது அபிப்ராயம்.

‘சைக்கோ’ ஜோதி என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் மகள்தான் வெண்பாவா என்ற கேள்விக்கு கிளைமேக்ஸில் பதிலைப் பொதித்து வைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்த ட்விஸ்ட் தான் படத்தின் பெயர் தொடங்கி திரைக்கதை வரை அனைத்திலும் ஊடுருவியிருக்கிறது என்பதால், அதன்மீது அவர் வைத்த நம்பிக்கை நன்கு புலப்படுகிறது.

அப்படியே, முழு திரைக்கதையையும் பட்டி டிங்கரிங் செய்து நட்சத்திரப் பட்டாளத்தைக் குறைத்து ரியலிஸ்டிக் அனுபவத்தை இன்னும் செறிவாகத் தந்திருக்கலாம்.
இதையெல்லாம் மீறி, தினசரிகளில் நாம் கடந்துபோகும் எத்தனையோ செய்திகளுக்குப் பின்னால் சில வேதனையான உண்மைகளும் இருக்கக் கூடும் என்பதைச் சொன்ன விதத்தில் வித்தியாசப்படுகிறது ‘பொன்மகள் வந்தாள்’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *