ஐ.தே.கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கும் அதிகாரம் ரணில் அணிக்கு கிடையாது

” ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து எம்மை நீக்கும் அதிகாரம் ரணில் அணிக்கு கிடையாது.தன்னிச்சையான முறையில் தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுத்தேர்தலில் மக்கள் தக்கபாடத்தை புகட்டுவார்கள்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும் தமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 102 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சி யாப்பை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஐ.தே.கவின் இந்த நடவடிக்கை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு வழங்கிய அனுமதியின் பிரகாரம்தான் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை உருவாக்கினோம். பிரதமர் வேட்பாளராக சஜித்தை நிறுத்துவதற்கும், செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு அனுமதி வழங்கிவிட்டு இன்று ஐக்கிய தேசியக்கட்சியால் தவறானதொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களில் 12 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. 80 பேர் எம்முடனேயே இருக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகின்றனர். அதேபோல் 69 அங்கத்தவர்களைக்கொண்ட ஐ.தே.க. செயற்குழு உறுப்பினர்களில் 40 இற்கும் மேற்பட்டோர் எம்முடனேயே இருக்கின்றனர். எனவே, கட்சி உறுப்புரிமையில் இருந்து எம்மை நீக்குவதற்கு அந்த குழுவுக்கு அதிகாரம் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு அரசுக்கு சார்பான அரசியலை நடத்தும் அந்த குழுவுக்கு மக்கள் தக்கபாடத்தை தேர்தலில் புகட்டுவார்கள்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *