விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மதுஷங்கவுக்கு கிரிக்கெட் விளையாடத் தடை

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு தற்காலிக கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (23) ஊரடங்கு வேளையில் குளியாபிட்டி, பம்மன பிரதேசத்திலிருந்து புதுலுபொத்த நோக்கி கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பன்னலை பிரதேசத்தில் வைத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, ஹெரோயின் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவரும் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
25 வயதான, ஷெஹான் மதுஷங்கவிடம் 2.7 கிராம் ஹெரோயின் காணப்பட்டதோடு, அவரது நண்பர் எனத் தெரிவிக்கப்படும் மற்றைய நபரிடம் 2.8 கிராம் ஹெரோயினும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு குளியாபிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிர்வரும்  ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்,

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான அவரது வருடாந்த ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, கிரிக்கெட் நிறுவனத்தால் வழங்கப்படும் ஏனைய அனைத்து வசதிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, அதன் பின்னர் அவர் மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைய முடியுமா என்பது தீர்மானிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஷெஹான் மதுஷங்க, தேசிய அணியின் பிரதான ஒப்பந்த பட்டியலுக்கு வெளியில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இரண்டு வருடத்திற்கு முன்னர் பிரீமியர் குழுவிற்கான ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக இரண்டு ஒருநாள் மற்றும் இரண்டு ரி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அவர், இலங்கையின் A அணி மற்றும் வளர்ந்து வரும் இளையோர் அணியில் பல சுற்றுப்பயணங்களில் பங்கேற்றுள்ளார்.
இலங்கை தேசிய அணியில் தான் பங்குபற்றிய முதல் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தி ஒரே நாளில் பிரபலமான பெருமையையும் ஷெஹான் மதுஷங்க கொண்டுள்ளார். கடந்த 2018இல் டாக்காவில் இடம்பெற்ற முக்கோணத் தொடரில் பங்களாதேஷுக்கு எதிராக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மஷ்ரபி மோர்டஷா, ருபல் ஹுஸைன், மஹ்மூதுல்லாஹ் ஆகிய பிரபல வீரர்களின் விக்கெட்டுகளையே அவர் இதன்போது கைப்பற்றினார்.
குறித்த தொடரிலேயே அவர் இரு ரி20 போட்டிகளில் விளையாடியிருந்ததோடு, காயம் காரணமாக தேசிய அணியில் மீண்டும் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *