கருவிலேயே கலைந்திருக்க வேண்டும்
கண்ணீர்விட்ட நடிகை மனோரமாவின் ஜனன தினம் இன்று

கருவிலேயே கலைந்திருக்க வேண்டும்”
கண்ணீர்விட்ட நடிகை மனோரமாவின் பிறந்த நாள் இன்று

நகைச்சுவை நடிகை மனோரமாவின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும்விதமாக ஒரு மீள்பதிவு…

“அம்மா கொடுத்த அருமையான மனசு’’

“நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பத்திச் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு? அதைத் தெரிஞ்சு வெளியுலகத்துக்கு என்ன ஆகப் போகுது.. சொல்லுப்பா.. வேணாம்ப்பா.. அதைப் பத்திப் பேச வேணாம்..’’
சென்னை தியாகராய நகரில் உள்ள அவருடைய வீட்டில் முதலில் சந்தித்தபோது குரல் கமறச் சொன்னார் மனோரமா. கண்கள் கலங்கியிருந்தன.

சில மாதங்கள் கழித்து அவர் வளர்ந்த ஊரான காரைக்குடிக்கு அருகில் இருக்கிற பள்ளத்தூருக்குப் போய் கோபி சாந்தா என்கிற மனோரமா பால்ய வயதில் வசித்த இடங்களுக்குப் போயிருந்தேன்.
மனோரமாவின் இளவயது வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறவர்கள் அங்கு மிஞ்சியிருந்தார்கள்.

பள்ளத்தூருக்கு மனோரமா சிறுவயதில் அம்மாவுடன் வந்ததைப் பற்றி, வீட்டு வேலைகள் செய்ததைப் பற்றி, அம்மா செய்த பலகாரங்களை எடுத்துக் கொண்டுபோய் விற்றுவிட்டு வரும் சிறுமியான பருவத்தைப் பற்றி, அந்த வயசிலேயே மனப்பாடமாய் ராகம் போட்டு பாப்பா என்றழைக்கப்பட்ட மனோரமா அந்தக் காலச் சினிமாப் பாடல்களைப் பாடுவதைப் பற்றிச் சொன்னார்கள்.
நாடகங்களில் நடித்ததைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். மனோரமா வீட்டில் அடுத்த சந்திப்பின்போது பள்ளத்தூர் அனுபவங்களைச் சொன்னபோது அவருடைய மனம் நிறைந்துபோனது கண் கலக்கத்தில் தெரிந்தது.

“உள்ளே வாப்பா.. உட்கார்ந்து பேசலாம்’’

நைட்டி மீது ஒரு துண்டைப் போட்ட நிலையில் அமர்ந்திருந்தார்.

“பிறந்தப்போ இருந்து எனக்குப் பிரச்சினை ஆரம்பிச்சுடுச்சு.. அம்மா பெயர் ராமாம்ருதம்.. நல்ல குணம்.. நான் கர்ப்பத்தில் இருந்தப்போ எங்க அப்பா அம்மாவை விரட்டியடிச்சுருக்கார்..
கர்ப்பத்தில் இருந்த என்னைக் கலைக்கவும் முயற்சி பண்ணி அதுக்கான மருந்தை அம்மாவுக்குக் கட்டாயப்படுத்திக் கொடுத்திச் சாப்பிட வைச்சிருக்காங்க.. ஆனா.. அதுக்குத் தப்பிட்டேன்.. கரு கலையலை.. பிறந்துட்டேன்..

பத்து மாசக் குழந்தையா இருந்த என்னைத் தூக்கிட்டு செட்டிநாட்டுக்கு அம்மா வந்துட்டாங்க.. வந்து வீட்டு வேலை செஞ்சு, பலகாரம் சுட்டுச் சின்னப்பிள்ளையா நான் வித்துட்டு வந்து.. எவ்வளவு சிரமத்தோட எங்கம்மா என்னை வளர்த்தாங்க.. தெரியுமா? செட்டிநாடுதான் எங்க அம்மாவையும், என்னையும் வளர்த்துச்சு..’’
ஐந்தாவது வகுப்பு வரை தான் படிப்பு. முதலில் பள்ளியில் பாடி, பிறகு நாடகங்களில் நடித்து- மனோரமா என்று பெயர் மாறி- அதில் நடித்த ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணமும் நடந்திருக்கிறது.

“எங்க அம்மா மாதிரியே எனக்கும் சோதனை. கர்ப்பமா இருந்த என்னை விட்டுட்டு வீட்டுக்காரர் போய்ட்டார். அம்மாதான் என்னைத் தேத்தி திரும்பவும் நாடகங்களில் நடிக்க வைச்சார்.
எஸ்.எஸ்.ஆரோட சேர்ந்து நிறைய நாடகங்களில் நடிச்சேன். அறிஞர் அண்ணாவுடனும், கலைஞருடனும் நாடகங்களில் சேர்ந்து நடிச்சேன். அப்போதும் எனக்குக் கைகொடுத்தவர் செட்டிநாட்டைச் சேர்ந்த கவிஞர் கண்ணதாசன் தான்.’’

1958-ல் கவிஞரின் தயாரிப்பில் ‘மாலையிட்ட மங்கை’ படத்திற்குப் பிறகு ‘கொஞ்சும் குமரி’ படத்தில் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகன்.
மனோரமா கதாநாயகி. அப்புறம் நகைச்சுவை பாத்திரங்களில் களம் இறங்கி  எம்.ஆர்.ராதா, பாலையா, காகா ராதா கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், சோ என்று ஆயிரக்கணக்கான படங்களில் நடித்திருக்கிற மனோரமாவுடன் பேசிக் கொண்டிருக்கிறபோது காலத்தில் முன்னும் பின்னுமாக நகர்வதைப் போலிருந்தது.

“உடம்புக்கு இப்போ கொஞ்சம் பிரச்சினையா இருக்கு.. இருந்தாலும் நடிக்கிறேன். நடிக்கிறது பிடிச்ச விஷயம். அதிலே சுணக்கமே இருக்கக் கூடாது. சினிமா எத்தனையோ நல்ல மனுஷங்களையும் அறிமுகப்படுத்தி வைச்சிருக்கு.. மோசமான மனுஷங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கு..
எங்கே நாம போனாலும் இந்த ரெண்டையும் நாம சந்திச்சுத்தான் ஆகணும். ஆனா எவ்வளவு பெரிய நடிகருங்க கூட எல்லாம் நடிக்கிற சந்தர்ப்பத்தை இதே சினிமா தானே உருவாக்கிக் கொடுத்திருக்கு..’’ என்றவர் சிவாஜியை, எம்.ஜி.ஆரை, நாகேஷை, எம்.ஆர்.ராதாவை, வாழ்வைத் திசை மாற்றிய எஸ்.எஸ்.ஆரை வாயார வாழ்த்தினார்.
தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொன்னார். ரசிகர்களை உச்சிமுகர்ந்ததைப் போலப் பேசினார்.

“இந்த முகத்தையும், பேச்சையும் மதிச்சு ரசிகர்கள் ரசித்ததனால்தான் இந்த வாழ்க்கை, வீடு, சொத்து எல்லாம் கிடைச்சிருக்கு.. போன மாசம் ஊரிலே இருக்கிற சாமி கோவிலுக்குப் போயிருக்கேன்.
அங்கே எனக்குத் தனி மரியாதை கிடைக்குது.. அதே ஊர்லே சின்னப் பிள்ளையா அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்.. இப்போ அதே ஊர்லே எப்பேர்ப்பட்ட மதிப்பை உருவாக்கித் தந்திருக்கா இந்தச் சாமின்னு அப்படியே கலங்கிப் போயிட்டேம்ப்பா..’’ பேசுகிறபோது செட்டிநாட்டுப் பேச்சு வழக்கு இடையில் வருவதைப் பற்றிக் கேட்கிறபோது சிறு வியப்பு முகத்தில்.

“பிறந்த இடத்து வாசம் எத்தனை வயசானாலும் இல்லாமப் போகுமா? சொல்லுங்க.. தில்லானா மோகானம்பாள் படத்தில் கூட அந்த பாஷையில் தான் பேசி நடிச்சிருப்பேன்.. எங்க ஊருலே யாரு வீட்டுக்கு வந்தாலும் முதல்லே “பசியாறிட்டீகளா?’’ன்னு ஒரு வார்த்தை கேப்பாக.. பாருங்க..
அதைக் கேட்டதும் சாப்பிடாதவுகளுக்கும் வயிறு நெறைஞ்சிரும். சுத்தி இருக்கிற மனுஷங்களை உத்துக் கவனிச்சா தானா பாஷை வந்துட்டுப் போகுது.. நான் கத்துக்கிட்டதெல்லாம் அப்படித்தான்’’- சொல்லிவிட்டுச் சிரித்தார்.
இரண்டை மணி நேரம் வரை தன்னைப் பற்றிப் பேசிக் கொண்டுபோனவர் கிளம்பும்போது புகைப்படம் எடுப்பதற்காகத் தன்னுடைய உடையை மாற்றிக் கொண்டு வந்தார். படம் எடுக்கும்போதெல்லாம் ஒட்டிக் கொண்டிருந்தது மெல்லிய புன்னகை.

“குடும்ப வாழ்க்கையில் எத்தனையோ சறுக்கல்களைச் சந்திச்சிருக்கேன். மனம் சோர்ந்தும் போயிருக்கேன்.. ஆனா அதை மீறி நின்னு காட்டணும்கிற வெறி என் கிட்டே இருந்துச்சு.. பாருங்க.. அதுதான் என்னை ஓடியாட வைச்சிருக்கு இது வரைக்கும்..

நீங்க பார்த்து எழுதுங்கப்பா.. எவ்வளவு சிரமப் பட்டாலும், அவமானம் வந்தாலும் சோர்ந்துபோய் ஒரு இடத்தில் மனசு தேங்கி நின்னுறக் கூடாது.
எதையும் மனசிலே வைச்சிருக்காம ஓடிக்கிட்டே இருக்கணும்.. செய்ய நினைச்சதைச் சாதிக்கணும்.. ஏதோ தங்களுக்கு வந்த கஷ்டத்தை மட்டும் பெரிசா நினைச்சுக்கிற பெண்கள் எங்க வாழ்க்கையில் நாங்க பட்ட கஷ்டங்களையும் பார்க்கணும்…’’ என்றார் நம்பிக்கையோடு.
மூட்டுவலி அதிகமாகி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தபோது இன்னொரு பிரமுகருடன் பார்க்கப் போயிருந்தேன். பேச்சில் அதிக நெகிழ்ச்சி தெரிந்தது.

“பேசாம சும்மா இப்படிக் கிடக்கிறது இருக்கே.. இது தான் கொடுமையா இருக்கு.. எப்போ போய் முகத்திலே மேக்கப் போடுவோம்னு தோணிக்கிட்டே இருக்கு.. என்னடா.. கால் சரியில்லாத நேரத்திலே இப்படிப் பேசுறாளேன்னு நினைக்காதீங்க…

இப்போ கூட ஒரு படத்திலே நடிக்கச் சொல்லியிருக்காங்க.. சந்தோஷமா இருந்துச்சு.. நமக்குப் பிடிச்சதைச் செஞ்சுகிட்டு உடம்பும், மனசும் நல்லா இருக்கிறப்பவே  உசிரு போயிரணும்..’’ என்று சொன்னவர் தன்னுடைய அம்மாவை நினைவுகூர்ந்து மென்மையான குரலில் சொன்னார்.
“ஒவ்வொருத்தரும் தன்னோட பிள்ளைக்கு எதையாவது கொடுத்துட்டுப் போவாங்க.. அப்படி எங்க அம்மா அவங்களோட அருமையான மனசை என் கிட்டே கொடுத்துட்டுப் போயிருக்காங்க..’’
மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே பேசிய அந்தக் கணங்களில் தெரிந்தது அதன் அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *