வடக்கு ஆளுநராக முன்னாள் இராணுவ தளபதி ஹத்துருசிங்க?

வடக்கு ஆளுநராக ஹத்துருசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது அந்த பதவியில் உள்ள திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார் என்றும், தேர்தலின் பின்னர் அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வுபெறவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்தினார்.
இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் பதவிகளில் அமர்த்தி வருகின்றார். அவரின் 6 மாத ஆட்சிக் காலத்துக்குள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 26 பேரை சிவில் நிர்வாக உயரதிகாரிகளாக நியமித்துள்ளார். இதனையே அவர் தொடரவுள்ளார்.
தேர்தல் முடிவடைந்ததும் அவரின் முதல் வேலையாக இருக்கப் போவது வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரை நியமிப்பதுதான். இந்தப் பதவிக்குப் பலர் முந்தியடித்தாலும், இருவர் தேர்வில் இருக்கிறார்கள்.
ஒருவர், இறுதிப் போர்க் காலத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி. பீல்ட் மார்ல் சரத் பொன்சேகாவின் வலது கையாக இருந்த இவர் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் மிக வேண்டியவரானார்.
போர் முடிவடைந்தபின் ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாச மாக நடந்து கொண்டமையால் வடக்கு ஆளுநர் பதவி இலகுவாகக் கிடைத்தது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றவர் கிட்டத்தட்ட அந்த ஆட்சி ஆட்டம் கண்ட தருணத்தில்நாடு திரும்பினார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவாக நின்றவர். இவர் இப்போது வடக்கு ஆளுநர் பதவியைக் குறி வைத்துக்காய்களை நகர்த்தியுள்ளார்.
ஆனால், இதே பதவிக்கு மற்றொரு மேஜர் ஜெனரலும் யாழ். மாவட்ட முன்னாள் தளபதியுமான ஹத்துருசிங்க போட்டியிடுகிறார்.
1980 களில் இராணுவத்தில் சேர்ந்த இவர், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிக காலம் சேவையிலிருந்தார். 65 ஆவது படைப்பிரிவின் 652 ஆவது பிரிவான பீரங்கிப் படைக்குப் பொறுப்பாகவும் பின்னர் அந்தப் படைக்கு கட்டளையிடும் தளபதியாகவும் செயற் பட்டவர். இறுதியுத்தத்தில் முல்லைத்தீவில் படை நடத்தியவர்.
தமிழ் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்ட இவரின் காலத்தில்தான் – போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமையாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டது.
இராணுவப் புலனாய்வை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தியதில் வெற்றிகண்ட இவரையே, இப்போது அரசஉயர் மட்டம் அதிகம் விரும்புகின்றது.
காரணம் வடக்கு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் நினைவேந்தல்களை தடுக்கவும் பொருத்தமான ஒருவர் ஹத்துருசிங்க என்று அரச உயர்மட்டம் கருதுவதால் தேர்தல் முடிவடைந்ததும் வடக்கு ஆளுநராக அவர் நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *