கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் மனுக்கள் பரிசீலனைக்கு

COVID-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த விடயம் தொடர்பிலான மேலும் இரண்டு வழக்குள் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையினால், மொத்தமாக 6 மனுக்களையும் ஜூன் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

அதன்போது, விடயங்களை சபையில் முன்வைக்குமாறு நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான மூர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் ஜசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல், தொற்றுநோய் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தொற்றுநோய்களால் மரணிப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு இருக்கின்ற நிலையில், கொரோனாவினால் உயிரிழந்தவரின் உடல் தகனம் செய்யப்பட வேண்டுமென, திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானியில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 வைரஸினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியுமென வர்த்தமானியை மீளத் திருத்தி வெளியிட உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *