விடுதலைப் புலிகளின் இறுதி ஆயுத கப்பல்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன

ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு அருகில்வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி நான்கு ஆயுத கப்பல்களும் அழிக்கப்பட்டன.” – என்று முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புலிகளுக்கு கடல்மார்க்கமாகவே ஆயுதங்கள் வருகின்றன என்பதை அறிந்துவைத்தோம். அதனை நிறுத்தவேண்டிய பொறுப்பு கடற்படையினருக்கு இருந்தது. ஆழ்கடலிலேயே புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை இருந்தது. ஆயுதங்கள் தேவைப்படும் பட்சத்தில் இலங்கை கடல் எல்லைக்குள் 200 மீற்றர்தூரம்வரை வந்து – அதன்பின்னர் டோலர் படகுகளில் எடுத்துவரப்படும்.

மீன்பிடி படகுகளுடன் இணைந்தே ஆயுதங்கள் எடுத்தவரப்பட்டன. இதனால் அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. படகுகளில் சிங்கள பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். நாம் ஒரு படகை அழித்தால், இரண்டு மூன்று உள்ளே சென்றுவிடும் நிலைமை காணப்பட்டது.

தாக்குதலின்போது எதிரிகள் எத்தகைய ஆயுதங்களை, எந்த ரக குண்டுகளைப் பயன்படுத்தினர் என்ற தகவல் தினமும் தாக்குதல் தலைமையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். 2006 இல் ஆயுதங்கள் சகிதம் புலிகளின் 11 டோலர் படகுகளை அழித்திருந்தோம். ஆனாலும் ஆட்லரி மற்றும் மோட்டார் குண்டு தாக்குதல்கள் குறையவில்லை. 11 படகுகளை அழித்தும் ஏன் எதிரிகளின் ஆயுதம் குறையவில்லை என ஆராய்ந்தோம். எமது உபாயத்தை மாற்றியமைத்தோம். எதிரிகளை தேடிச்சென்று தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. புலனாய்வுத்துறையை பலப்படுத்தினோம்.

இதன்படி பல தகவலைகளைத்திரட்டி சர்வதேச கடல் எல்லைவரைசென்று தாக்குதல் நடத்தி அழித்தோம். புலிகளின் இறுதி நான்கு கப்பல்களை அழிப்பதற்கு ஆஸ்திரேலியாவின் கடல் எல்லைக்கு அருகில் செல்லவேண்டியேற்பட்டது. இதற்காக அமெரிக்காவிடம் புலனாய்வு தகவல்களை பெறக்கூடியதாக இருந்தது. ‘செட்டலைட்’ படங்களை கோரினோம். நாம் எப்படி கண்காணித்தோம் என்பது அவர்களுக்கு தெரியாது.

புலிகளிடம் 8 கப்பல்கள் இருந்தன. அவற்றில்தான் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் இந்தோனேசியா கடல் எல்லைப்பகுதியில்தான் இருந்தன. இவற்றில் மூன்றை நாம் அழித்த பிறகு, எஞ்சிய படகுகள் ஆஸ்திரேலியா பகுதியை நோக்கிச்சென்றன.

கரும்புலிகளை அழிக்க உபாயங்கள் கையாளப்பட்டன. 2008 இற்கு பிறகு கரும்புலிகள் கடலில் இருக்கவில்லை. அவர்கள் தரைப்படையுடன் இணைந்து தாக்குதல்களை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *