உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சார்பில் சட்டத்தரணி ஆஜரானார்

தெளிவான உளவுத் தகவல் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலும் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சார்பில் நேற்று முதன் முறையாக சட்டத்தரணி ஒருவர் ஆஜரானார்.

ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இதன்போது மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரானார்.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பில் தாம் ஆஜராகப் போவதில்லை என சட்ட மா அதிபர் அறிவித்திருந்த நிலையில், முதன் முறையாக இன்று மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணி ஒருவர் ஆஜரானார்.

இந்நிலையில் இந்த 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் விசேட பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் தலைமையிலான 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இதற்கு முன்னர் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதுடன், புவனேக அளுவிஹாரே, எஸ். துரைரராஜா மற்றும் காமின அமரசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் நேற்று இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போதே இந்த மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விசாரணைகளை தொடர்ச்சியாக நடத்துவதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.

அதன்படி எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூல சமர்ப்பணங்களை அனைத்து தரப்பினரும் மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் பொறுய்ப்புக் கூறத்தக்க தரப்பான, முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் அனைத்தையும் சட்டத்தரணியிடம் கையளிக்குமாறு மனுதாரர்களுக்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தும் அதனை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, அருட்தந்தை சரத் இத்தமல்கொட உள்ளிட்ட மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *