நாளை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவை ஆரம்பம்

நாடுகளுக்கிடையேயான சில பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஶ்ரீலங்கன் விமான சேவை நாளை (13) முதல் ஒரு சில நாடுகளுக்கு தமது விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகில் பொருளாதார நடவடிக்கைகள் மீள ஆரம்பமாவதைக் கருத்தில் கொண்டு இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அந்தந்த நாட்டு பயண ஆலோசனைகளின் கீழ் பயணிக்க தகுதியுள்ள பயணிகளுக்கு, லண்டன், டோக்கியோ (நரிட்டா), மெல்பேர்ன், ஹொங்கொங் உள்ளிட்ட நகரங்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளதாக விமான சேவை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த இடங்களுக்கு அல்லது அதற்கு அப்பால் பயணிக்க விரும்பும் பயணிகள் ஶ்ரீலங்கன் அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது உங்கள் அருகிலுள்ள பயண முகவர் மூலமாகவோ தற்போது டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரும்பாலான அரசாங்கங்கள், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமது நாட்டவர்களை, அந்தந்த பயண ஆவணங்களால் நிர்ணயிக்கப்பட்ட செல்லுபடியாகும் மற்றும் தனிமைப்படுத்தல் காலங்களுக்கு உட்பட்டு தங்கள் நாடுகளுக்குத் திரும்ப அழைக்கின்றன. மே 13 முதல் இலங்கை எயார்லைன்ஸ் இந்த விசேட பயணத் திட்டத்தின் கீழ் லண்டன் மற்றும் அதற்கு அப்பால் பயணிக்க எதிர்பார்த்துள்ள பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆயினும் இந்நெருக்கடியான நிலையிலும் இலங்கையின் ஏற்றுமதித் தொழில்களுக்கு உதவியாக, 17 நகரங்களுக்கு விசேட சரக்கு விமானங்களை ஶ்ரீ லங்கன் விமான சேவை, சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. அந்த வகையில் மாலி இற்கு வாராந்தம் மூன்று விமானங்கள், சென்னை, ஹொங்கொங், சிங்கப்பூர், லண்டன், டோஹா, டுபாய், மெல்பேர்ன், பீஜிங், குவாங்சோ (கென்டன்), ஷங்காய் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு இரண்டு விமானங்கள்; மும்பாய, கராச்சி, லாகூர், டாக்கா, பிரங்பேர்ட், டோக்கியோ (நரிட்டா) ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒரு விமானமும் இயக்கப்படுகின்றது.
அதற்கமைய தற்போது லண்டன், டோக்கியோ (நரிட்டா), மெல்போர்ன், ஹொங்கொங்கிற்கு பயணிகள் மற்றும் சரக்கு ஆகிய இரண்டு வகை விமானங்களும் இயங்கும்.
இந்த புதிய விமான சேவைகளைப் பயன்படுத்தி பயணிக்க விரும்பும் பயணிகள், ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பொறுத்து அந்தந்த நாடுகளுக்குள் நுழைய தகுதியுடையவர்கள் என்பதை உரிய அதிகாரிகளால் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை விமான சேவை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயணிக்க விரும்பும் பயணிகள், டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யும் முன் அந்தந்த நாட்டு எல்லைக் கட்டுப்பாடு அல்லது குடிவரவு அதிகாரிகளுடன் விபரங்களை அறிதல் அல்லது தங்கள் பயண முகவர்களை தொடர்பு கொள்ளவும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலதிக தகவலுக்கு, ஶ்ரீலங்கன் விமான சேவை உலகளாவிய தொடர்பு மையத்தை 0197331979 அல்லது பயண முகவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *