இலங்கை வரலாற்றில் மிக நீண்ட காலம் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம்

இலங்கையில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டமாக கடந்த ஒன்றரை மாதங்கள் அமுலில் இருந்த ஊரடங்கு, வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இந்த தகவலை இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரான இரா.செல்வராஜா பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்க சட்டமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இலங்கையில் கொரோனா அச்ச சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில பகுதிகளில் ஒரு சில மணிநேரம் மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதேவேளை, சில பகுதிகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டன.
இலங்கை வரலாற்றில் மக்கள் இன்று வரையான காலம்வரை இவ்வாறு முடங்கியிருக்கவில்லை என மூத்த தமிழ் ஊடகவியலாளர் இரா.செல்வராஜா தெரிவிக்கின்றார்.
இலங்கையில் முதலாவது தடவையாக எப்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது? இலங்கையில் கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எவ்வாறு அமைந்திருந்தது? என பலர் மத்தியில் தற்போது கேள்வி எழும்பியுள்ள நிலையில், அந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலப் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.
காலணித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இலங்கையில் முதல் முறையாக 1953ஆம் ஆண்டுகளில் ஒரு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் முதல் தடவையாக அவசர காலச் சட்டம் அமல்டுத்தப்பட்டு, அன்றைய தினமே முதன் முறையாக நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1956 – தனிச் சிங்களச் சட்டம்
அதன்பின்னர், இலங்கையில் 1956ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தலைமையிலான அரசாங்கம் தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த சட்டத்தின் மூலம் இலங்கையில் அதுவரை காலம் ஆட்சி மொழியாக காணப்பட்ட ஆங்கில மொழி அகற்றப்பட்டு, சிங்களம் இலங்கையில் அரசகரும மொழியாக்கப்பட்டது.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அரச சேவையிலிருந்த அனைத்து தமிழர்களும் சிங்களத்தை கட்டாயம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் மாத்திரமன்றி, அன்றைய காலப் பகுதியில் அரசியலில் ஈடுபட்ட சில சிங்களத் தலைவர்களும் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.

குறிப்பாக 1958ஆம் ஆண்டு காலப் பகுதியில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அரச செயற்பாடுகள் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டங்கள் வலுப் பெற்ற சந்தர்ப்பத்திலும், அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக மூத்த தமிழ் ஊடகவியலாளர் இரா.செல்வராஜா தெரிவிக்கின்றார்.
தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் வாபஸ் பெறப்பட்டு, தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

1971 – மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி
1971ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சி நடைபெற்ற தருணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆயுதக்கிடங்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து, மக்கள் விடுதலை முன்னணியினர் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இதையடுத்து நாட்டில் பாரிய கிளிர்ச்சி ஏற்பட்ட நிலையில், இலங்கையின் தென் பகுதியிலுள்ள பல பிரதேசங்களை மக்கள் விடுதலை முன்னணியினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக இந்திய படை சுதந்திர இலங்கைக்குள் முதற்தடவையாக பிரவேசித்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் உதவியுடனேயே மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த காலப் பகுதியிலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டடிருந்ததாக மூத்த ஊடகவியலாளர் இரா.செல்வராஜா தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை கொலை செய்ததாக வெளியான தகவலை அடுத்து, இலங்கையின் தென் பகுதியில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
இந்த தாக்குதல் சம்பவங்களில் தமிழர்களின் சொத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதுடன், சுமார் 3000 வரையான தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஜுலை கலவரமே, இலங்கையின் இனப் பிரச்சினையைக்கான ஆயுதப் போராட்டத்தை வலுப்படுத்த காரணமாக அமைந்திருந்ததாக சொல்லப்படுகின்றது.
இந்த காலப் பகுதியில் அமைதியான நிலைமைகளை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக இரா.செல்வராஜா கூறுகின்றார்.

அதேபோன்று 1987, 1989ஆம் ஆண்டுகளிலும் இலங்கையில் கிளர்ச்சிகள் ஏற்பட்டிருந்ததுடன், அந்த காலப் பகுதியிலும் இடைக்கிடை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.
அதேநேரம், இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால ஆயுதப் போராட்டத்தின் போது, இடைக்கிடை அவசர காலச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வரை தொடர்ந்திருந்தது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் 30 வருட கால ஆயுதப் போராட்டம் மௌனித்த நிலையில், இலங்கையில் அதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தளர்த்தப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்திலிருந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு பேருவளை – அளுத்கம பகுதியிலுள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் போது சில தினங்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

அதன்பின்னர், கண்டி நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை சம்பவமொன்று 2018ஆம் ஆண்டு நடந்தேறியது.
இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடனும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்ட அவசர காலச் சட்டத்தை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அமல்படுத்தியிருந்ததுடன், அதன் பின்னர் ஊரடங்கு சட்டமும் அமல்படுத்தப்பட்டது.
அன்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சில வாரங்கள் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர இலங்கை வரலாற்றில் இதுவரை காலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டங்களிலேயே அதிக காலம் அமலில் இருந்த ஊரடங்கு சட்டமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

யுத்தம் மற்றும் வன்முறைகள் காரணமாகவே மாத்திரமே இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் நோக்குடன் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாகவும் இது கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 50 நாட்களின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வரும் நோக்குடன் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *