இலங்கையில் மே 11 ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

மே 11 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தை உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும். அதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – என்று பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன  தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மே  7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். இக்காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம், தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் வெசாக் வாரத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும். எனவே, வீட்டிலேயே இருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். விசேட பொலிஸ் குழுக்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மே 11 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்ட பின்னர் மாவட்டங்களுக்கு இடையிலான கட்டுப்பாடும் தளர்த்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் சனிக்கிழமையளவில் அறிவிக்கப்படும்.ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் எவ்வாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படவேண்டும் என்பது தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் வர்த்தமானி அறிவித்தலொன்று தயாராகிவருகின்றது. 

கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாய வலயமாக இல்லாத பகுதிகளுக்கு செல்வது பிரச்சினையாக அமையாது. எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு எப்படியும் அனுமதி வழங்கப்படாது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் எவ்வாறு செயற்படவேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அறிவிக்கப்படும். அதற்கான நடவடிக்கை இடம்பெறுகிறது. இது வர்த்தமானிமூலம் சட்டபூர்வமான அறிவிப்பாக வெளிவந்த பின்னர், அதனைமீறும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் வழக்கு தொடுக்க முடியும்.

தனிமைப்படுத்தல் சட்டத்திலுள்ள விடயங்கள் 100 வீதம் பின்பற்றப்படவேண்டும். அப்போதுதான் 2 மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததன் பயனை அடையலாம். அவ்வாறு இல்லாவிட்டால் ஒருவருக்காவது கொரோனா ஏற்படும் பட்சத்தில் அது கொத்தணி பரவலாக மாறக்கூடும்.”  – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *