ஆடு மற்றும் பப்பாளிப்பழங்களுக்கு கொரோனா வைரஸ்?

தான்சானியா நாட்டில் கொரோனா பரிசோதனை கருவிகளின் உண்மை தன்மையை அறிய ஆடு மற்றும் பப்பாளியின் மாதிரிகளில் மனிதர்களின் பெயரை குறிப்பிட்டு ஆய்வுக்கு அனுப்பியதில் அவற்றிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மையத்தின் தலைவரும்  பணியிடை நீக்கம்.
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா என்ற அரக்கன், கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலும் தனது தீவிரத்தை காட்டி வருகிறது. தான்சானியாவில் இதுவரை கொரோனாவால் 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை கருவிகளின் செயலில் சந்தேகமடைந்த அந்நாட்டு அதிபர் ஜான் மகுஃபலி, அவற்றை சோதனை செய்ய பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பப்பாளி மற்றும் ஆடு ஒன்றின் மாதிரிகளில், மனிதர்களின் பெயர் மற்றும் வயதை இணைத்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். அவற்றின் முடிவில் ஆடு மற்றும் பப்பாளிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை அறிந்து அதிருப்தியடைந்த அதிபர் மகுஃபலி, வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கொரோனா பரிசோதனை கருவிகளில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதாக அறிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள் அனைத்தும் தங்களது நாட்டின் நலனுக்காகத்தான் என எடுத்துக்கொள்ள கூடாது என்றும் சோதனை கருவிகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளார். இதனிடையே ஆடு மற்றும் பப்பாளியின் மாதிரிதான் என்பதை கூட கண்டுப்பிடிக்காமல் சோதனை செய்ததாக, தான்சானியா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, தான்சானியா அரசு கொரோனா குறித்து மறைமுகத் தன்மையுடன் நடந்துக் கொள்வதாக அந்நாட்டு மக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தரமற்ற கருவிகள் மூலம் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் நலமாக இருப்பவர்களுக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *