புது வடிவம் எடுக்கும் இந்திய தமிழ் சினிமா

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் முடங்கிய துறைகளில் சினிமாவும் ஒன்று.
தமிழ் சினிமா ஒன்றரை மாதமாக அனைத்து இயக்கங்களையும் நிறுத்தி விட்டது.
சினிமாவின் பெரும் அங்கமான திரையரங்குகள், இப்போதைக்குத் திறக்கப்படும் சாத்தியம் இல்லை.
எனினும் சினிமாவின் பிற அங்கங்கள் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.

இதன் ஒரு பகுதியாக, படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளை விரைவில் தொடங்க ஆயத்தமாகி விட்டது கோடம்பாக்கம்.
கேரள அரசு, படப்பிடிப்புக்குப் பிந்தைய எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு, ஒலிக்கலவை போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசும் அதுபோல், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைச் செய்ய அனுமதி தர வேண்டும் என தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளமான ‘பெப்சி’ வலியுறுத்தியுள்ளது.
இதனால் பெப்சி தொழிற்சங்கத்தில் உள்ள 40 % உறுப்பினர்களுக்கு, ஓரளவு வேலை கிடைக்கும் என்பது பெப்சியின் கருத்து.

இந்தப் பணிகளுக்கு அதிகமான பணியாளர்கள் தேவைப்பட மாட்டார்கள்.
உதாரணமாக எடிட்டிங் வேலைகளுக்கு இரண்டு, மூன்று பேர் மட்டுமே போதும்.
அதுபோல், பின்னணி இசைக் கோர்ப்புக்கு 5 முதல் 10 வரையிலான இசைக் கலைஞர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம்.

“இந்தப் பணிகளுக்கு அனுமதி அளித்தால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பணியாற்றுவோம்’’ என்று சினிமா தொழிலாளர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் படிப்படியாக, ஷூட்டிங் தொடங்கும் உத்தேசமும் உண்டு.
ஆனால், இப்போது உள்ளதுபோல் நெருக்கமான காதல் காட்சிகளைப் படமாக்குவது இல்லை என இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர்.
60 ஆண்டுகளுக்கு முன், காதல் காட்சிகள் எப்படி இருந்ததோ, அதுபோல் இனி வரவிருக்கும் படங்களில் ‘ரொமான்ஸ்’ சீன்கள் இருக்கும்.

அப்போது திரையில் தோன்றும் காதலர்கள்  தங்களது அன்பை வெளிப்படுத்த, மலர்கள் உரசிக்கொள்வது போலவும், பொம்மைகள் இணைவது போன்றும் காட்சிகளை வடிவமைத்தனர் இயக்குநர்கள்.
தற்போது மீண்டும் அந்த பழைய வரலாறு திரும்பும்.
ஹீரோ-ஹீரோயின் பங்கேற்கும் காட்சிகளில் நெருக்கம் இருக்காது.

கொரோனாவை வலிந்து வரவழைக்கும், ஹேண்ட் ஷேக், முத்தம், கட்டி அணைத்தல் போன்ற காட்சிகளுக்கு இனிமேல் ‘தடா’.
ஷூட்டிங் தொடங்கும் பட்சத்தில் சில சிக்கல்களும் உள்ளன.

இப்போது ஜூனியர் நடிகர்-நடிகைகளுக்கு ஒரே ஒரு ஒப்பனை கலைஞர் மட்டுமே மேக்கப் போடுகிறார்.
அனைவருக்கும் மேக்கப் போட, ஒரே ஸ்பான்ச், ஒரே பவுடர், க்ரீம் தான் பயன்படுத்தப்படுகிறது.
கும்பலாக திரளும் அத்தனை பேருக்கும் ஒரே ஒருவர், ஒரே நேரத்தில் மேக்கப் போடும்போது, கொரோனா பரவும் ஆபத்தை ஏற்படுத்தும்.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பிரதான அம்சமே, தனி நபர் இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய இரண்டும் தான்.
ஜூனியர் ஆர்டிஸ்டுகளை வைத்து ஷூட்டிங் நடத்தும் போது, இவை எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *