இந்தியாவில் குடிமகன்கள், ஒரே நாளில் சுமார் 500 கோடிக்கு மது வாங்கி சாதனை படைத்துள்ளனர்

நாடு முழுவதும் ஊரடங்கால் 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடைகளில் முண்டியடித்த ‘குடி’மகன்கள், ஒரே நாளில் சுமார் 500 கோடிக்கு சரக்கு வாங்கி சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் துவண்டுப்போன பொருளாதாரத்தை மீட்பதற்கான நம்பிக்கையை பிரகாசமாக ஒளிரச் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கட்டமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்தே, நாடு முழுவதும் அனைத்து கடைகளைப் போல மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் ‘குடி’மகன்கள் தவித்துப் போன நிலையில், மே 4ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறையில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இதில் மதுக்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ‘குடி’மகன்கள் குஷியாயினர்.

நேற்று முன்தினம், திங்கட்கிழமை கடை திறக்கப்பட்ட உடனேயே நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் மதுக்கடைகள் முன்பாக கிமீ கணக்கில் கூட்டம் கூடியது. சமூக இடைவெளியை கடைபிடித்தபடி மதுப்பிரியர்கள் சரக்குகளை சந்தோஷத்துடன் வாங்கிச் சென்றனர். இதில் ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் வரிசைக்கட்டி நின்று மது வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்நிலையில், நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்ட ஒரே நாளில் சுமார் 500 கோடிக்கு  விற்பனை நடந்து சாதனை படைக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதிலும், தமிழகம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. குஜராத், பீகார் இரண்டும் மது விலக்கு கடைபிடிக்கும் மாநிலங்கள். இவை தவிர, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மட்டும் தான் தற்போதைக்கு விற்பனை நடந்து வருகிறது.

இம்மாநிலங்களில் கூட நோய் தொற்று தீவிரமாக உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. அப்படியிருந்தும் ஒரே நாளில் 500 கோடிக்கு சரக்குகள் வாங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் ரூ.100 கோடிக்கு விற்பனை நடந்திருப்பதாக அம்மாநில கலால் துறை கூறி உள்ளது. வழக்கமாக அங்கு ஒருநாள் மது வருவாய்  70-80 கோடி. இதை மிஞ்சி விட்டது தற்போதைய கொரோனா வருவாய். தலைநகர் லக்னோவில் மட்டுமே மது விற்பனை 6.3 கோடிக்கு நடந்துள்ளது.
கர்நாடகாவில் 3.9 லட்சம் லிட்டர் பீர், 8.5 லட்சம் லிட்டர் பிராந்தி, ரம் உள்ளிட்ட மற்ற சரக்கு வகைகளையும் விற்பனை ஆகி உள்ளது. இதன் மூலம் ஒருநாள் வருவாய் 45 கோடியாகும். ஆந்திராவில் 3,500 கடைகளில் 2,300 திறக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரே நாள் விற்பனை 68.7 கோடி ஆகும்.

மகாராஷ்டிராவில் வழக்கமாக 24 லட்சம் லிட்டர் மது விற்பனையாகும். ஆனால் கொரோனா பீதியால் முதல் நாளில் 5-6 லட்சம் லிட்டர் மது மட்டுமே விற்றுள்ளது. இது நான்கு மடங்கு குறைவாகும். டெல்லியிலும் பாதிப்பு அதிகம் இருந்தாலும், மது விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு நீண்ட வரிசையில் மக்கள் மது வாங்கி சென்றனர். மேற்கு வங்கத்திலும் நல்ல விற்பனை நடந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக முதல் வசூல் மட்டும் ரூ.500 கோடியை தாண்டும் என சில புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. மது விற்பனைதான் மாநில அரசுகளின் வருவாய் ஆதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது 40 நாட்களைக் கடந்து ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்பதற்கான நம்பிக்கையாகவும், இக்கட்டான இந்த நேரத்தில் மாநில அரசுகளின் கஜானாவை ஓரளவுக்கு நிரம்பும் வகையிலும் மது விற்பனை கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிறப்பு வரி: விலை எகிறினாலும் விற்பனை சரியவில்லை:
40 நாட்களுக்குப் பிறகு டெல்லியில் மது விற்பனை தொடங்கிய நிலையில், அம்மாநில அரசு மது வகைகளுக்கு ‘கொரோனா சிறப்பு வரி’யை விதித்தது. இதனால் அனைத்து மது வகைகளின் விலையும் 70 சதவீதம் வரை அதிகரித்தது. இதே போல பல மாநில அரசுகளும் கலால் வரியை உயர்த்தின. மேற்கு வங்கத்தில் 30 சதவீதமும், ஆந்திராவில் 50 சதவீதமும் விலை அதிகரிக்கப்பட்டது. ஆனால் ‘குடி’மகன்கள் இதற்கெல்லாம் சற்றும் அசரவில்லை. எவ்வளவு விலை என்றாலும் வாங்கத் தயார் என்ற ரீதியில், வரிசை கட்டி பெட்டி பெட்டியாக வாங்கிச் சென்றனர். விலை எகிறினாலும் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இதற்கிடையே, டெல்லியில் அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, தமிழகத்தைப்போன்று  பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் வாட் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஊரடங்கிற்கு பிறகு மதுக்கடைகள் திறந்த நிலையில் அதிக வரவேற்பு காரணமாக மாநில அரசு மதுபானங்களின் விலையை மேலும் 50 சதவீதம் அதிரடியாக உயர்த்தப்பட்டுளது. எனினும், விலை உயர்வை கணக்கில் கொள்ளாமல் மதுக்கடைகளில் மது வாங்கி குடிப்பதற்காக கடை திறப்பதற்கு முன்பு மது பிரியர்கள் காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி குடித்தனர். இந்நிலையில் மது பிரியர்கள் தொடர்ந்து மதுபாட்டில்களை வாங்கி குடிப்பதால் அதனை குறைக்க வேண்டும் என்பதற்காக ஆந்திர அரசு நேற்று மதுபானங்களின் விலையை மேலும் 50 சதவீதம் உயர்த்தியது. இதனால் இரண்டு நாட்களில் மட்டும் மதுபானங்களின் விலை 75 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சரக்கு வீடு தேடி வரும்:
சட்டீஸ்கரில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அங்கு கூட்டம் கூடுவதை தடுக்க மாநில அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஆன்லைனில் மது விற்பனைக்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் மொபைல் எண், ஆதார் எண், முகவரி கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 5000 மிலி சரக்கு வாங்கலாம். டெலிவரி கட்டணம் ரூ.120 வசூலிக்கப்படும். காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை டெலிவரி செய்யப்படும். இதற்கும் நல்ல வரவேற்பு இருப்பதாக அம்மாநில கலால் துறை கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *