இந்தியாவில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு, மே மாதம் 4ஆம் திகதி தொடங்கி, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று மிதமாக மற்றும் குறைவாக உள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை குறியீட்டு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை மண்டல பகுதிகளில் 50% பயணிகளுடன் பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு மண்டல பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் இன்னொருவர் பயணிக்கலாம்.

சிவப்பு மண்டலங்களில் பேருந்து மற்றும் தனியார் பயன்பட்டு வாகனங்களை இயக்க அனுமதி இல்லை.

விமானம், ரயில் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.

உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளபடி அத்தியாவசிய தேவைகள், மருத்துவ வசதிகள், உணவுப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டும் விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் ஆகியவை இயங்குவதற்கான தடையும் நீடிக்கிறது.

இதுவரை இருந்ததைப் போலவே சமூக, மத மற்றும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *