கொரோனா அடையாளத்துடன் மகனுடைய பிறந்த நாளை கொண்டாடிய குடும்பம்

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவியுள்ளதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் எல்லாம் மூடிக் கிடக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகெங்கிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையில், அமெரிக்காவில் ஒரு தாய், தனது மகனின் முதல் பிறந்த நாளை ஊரடங்குக்கு மத்தியில் வீட்டுக்குள்ளேயே கொண்டாடினார்.

புளோரிடாவைச் சேர்ந்த அந்த தாய் அபே ஃபர்லாங் தனது மகன் டெவினின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வித்தியாசமான கொரோனா அடையாளத்துடன் (பிராண்ட்) கூடிய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். அதில், குழந்தை டெவின், தனது பிறந்தநாளை  கொரோனா கேக் வெட்டி கொண்டாடினார். அவர், கொரோனா டி-சர்ட் அணிந்திருந்தார். குடும்பத்தின் மற்றவர்களும் தங்கம் மற்றும் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்ட புத்தாடையான கொரோனா டி-சர்ட்டுகளையும் அணிந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் குறித்து, சமூக வலைதளங்களில் பலவித கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.
 
குழந்தையுடன் பீர் குடிப்பது சரியா? அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்து, கொண்டாட்டங்கள் தேவையா? குழந்தைக்கு பீர் கொடுத்தீர்களா? அல்லது எந்த வகையான கேக் கொடுத்தீர்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், சிலர் வீட்டுக்குள்ளேயே எளிமையாக பிறந்தநாள் கொண்டாடியதை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் அபே ஃபர்லாங் வெளியிட்ட பதிவில், ‘எனது மகனின் முதல் பிறந்த நாளை எனது பெரிய குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற சொல்வதால், கொண்டாட்டங்கள் சாத்தியமற்றது என்று முடிவு செய்தேன்.

அப்போது எனக்குள் ஒரு விஷயம் தோன்றியது. அதன்படி, ‘கொரோனா பீர்’, ‘கொரோனா கேக்’, ‘கொரோனா டி- சர்ட்’ ஆகியவற்றுடன் தனி அடையாளத்துடன் கொண்டாட முடிவு செய்தேன். அதற்காக, அனைத்து பொருட்களையும் தயார் ெசய்தேன். எந்தவொரு தனிமைப்படுத்தலும் நாங்கள் பிறந்தநாள் கொண்டாடுவதைத் தடுக்காது. இது மிகச்சிறிய கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக வாழ்க்கையில் மறக்கமுடியாது. எனது குடும்பமே எனக்கு முக்கியமானது. நாங்கள் எங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம். இப்போதைக்கு அதுதானே மிகவும் முக்கியமானது. எதிர்காலம் என்ன என்பது யாருக்குத் தெரியும். இப்போதைய மகிழ்ச்சிதான் முக்கியம்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *