இத்தாலியில் மே மாதம் 4ஆம் திகதி முதல் பயிற்சி போட்டிகள் ஆரம்பம்

கொரோனா அச்சுறுத்தலுக்கு அதிகம் ஆளாகி இருக்கும் நாடுகளில் இத்தாலியும் ஒன்று.  கொரோனா மரணம், 10 ஆயிரத்தை முதலில் கடந்த நாடு அதுதான்.  அதனால் அங்கு   கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், விளையாட்டு போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பிரபல கால்பந்து  போட்டியான  சீரி-ஏ சாம்பியன்ஷிப்  மார்ச் 9ம் தேதி இடை நிறுத்தப்பட்டது. இன்னும் 12 சுற்றுகள் எஞ்சியுள்ளன. போட்டியை தொடர சீரி-ஏ  அமைப்பாளர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.  ரசிகர்கள் இல்லாமல்  மூடிய அரங்கில் போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டனர். ஆனால், இத்தாலி சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதிக்கவில்லை.

 இந்நிலையில் இத்தாலி பிரதமர்  கியூசெப் கோன்டே கூறியதாவது:  சூழலுக்கு ஏற்ப தனிநபர்  பயிற்சிகளை மே 4ம் தேதியில் இருந்தும்,  குழுப் பயிற்சிகளை மே 18ம் தேதியும் தொடங்கலாம். அதே நேரத்தில் பயிற்சி பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் பணியில் விளையாட்டு, சுகாதாரத்துறை அமைச்சர்கள், அறிவியலறிஞர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகள்  ஈடுபடுவார்கள். அவர்கள் உத்தரவாதம் அளித்த பிறகே அனுமதி தரப்படும்.  நமது வீரர்கள் நோய்வாய்ப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

நானும் கால்பந்து ரசிகன்தான். போட்டிகளை இடையில் நிறுத்தியது மற்ற இத்தாலியர்களைப் போன்று எனக்கும் வருத்தமாகவே இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை என்பதை அதிதீவிரமான ரசிகர் கூட புரிந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு கோன்டே கூறியுள்ளார். கொரோனா பீதியால்  திசை தெரியாமல் விளையாட்டு உலகம் விழிபிதுங்கி நிற்கும்  நிலையில் இத்தாலி  முதல் அடியை எடுத்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறது. அது சரியான திசைதானா என்பது இன்னும் சில நாட்களில் தெரியலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *