ஒரு நாடகத்தால் ஹிட்லர் உருவாகிய சுவாரஸ்யமான கதை

ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியாக உருவானதன் பின்னணியில் ஒரு நாடகம் இருக்கிறது. அதைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார் எழுத்தாளர் மோகனரூபன். அந்தப் பதிவு புதுசுடர் வாசகர்களுக்காக…

அடால்ப் ஹிட்லர், ஆஸ்திரியா நாட்டில், நாள்கூலி வாங்கும் தொழிலாளியாக வறுமையில் வாடிக் கொண்டிருந்த நேரம்.
ஹிட்லருக்கு அப்போது ஆகஸ்ட் குபிசெக் என்ற நண்பர் இருந்தார். குபிசெக் அப்போது மாணவர்.
ஒருமுறை ஆஸ்திரியா நாட்டின் லின்ஸ் நகரில் இசைமேதை ரிச்சர்ட் வாக்னரின் ‘ரியன்சி’ (Rienzi) என்ற இசை நாடகம் நடைபெற்றது.
அந்த இசை நாடகத்தை நின்று கொண்டே பார்க்கக் கூடிய நுழைவுச்சீட்டு ஹிட்லருக்கும், அவரது நண்பருக்கும் கிடைத்தது. நண்பர்கள் இருவரும் அந்த இசை நாடகத்தைப் பார்த்து ரசித்தனர்.
ரியன்சி இசை நாடகத்தின் கதை என்ன தெரியுமா? ரியன்சி என்பவர் ரோம் நகரில், 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அரசியல்வாதி. அவர் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்.
ரோம் நகரில் தனது பேச்சுத் திறமையால் அனைவரையும் கட்டியிழுத்த ரியன்சி, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சி ஒன்றை ஏற்படுத்தியதால் மக்கள் அவரை தலைவராக்குகிறார்கள்.

ரியன்சியால் ஆட்சி, பதவியை இழந்த மன்னர் பரம்பரையினரும், இதர செனட் உறுப்பினர்களும் அவருக்கு எதிராக சதிவேலையில் இறங்குகிறார்கள்.
ரியன்சியைப் பற்றி மக்களிடம் தப்பும் தவறுமாக பிரச்சாரம் செய்கிறார்கள். அது வெற்றி பெறுகிறது.

கிறிஸ்துவ மதபீடமும், ரியன்சிக்கு எதிராகத் திரும்பிய நிலையில், ரியன்சியின் புகழ்வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அவர் வீழ்ச்சியடைகிறார். அவரது நெருங்கிய நண்பர்கள் கூட அவரைக் கைவிட்டுவிடுகிறார்கள்.
ரியன்சிக்கு எதிராகத் திரும்பும் மக்கள் கூட்டம் தீப்பந்தங்களுடன் அவரை சூழ்கிறது. பெரும் தீயில் விழுந்து, ரியன்சி மறைந்து விடுகிறார். இதுதான் அந்த இசை நாடகத்தின் கதை.
வாக்னரின் அந்த இசை நாடகம் 1840-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இருபது வயது இளைஞரான ஹிட்லரிடம் அந்த நாடகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

ஹிட்லருக்கு ஏற்கெனவே வாக்னரின் இசை பிடிக்கும். இந்த நிலையில் நாடகத்தைப் பார்த்து முடித்த பின் ஹிட்லர் ஆளே மாறிப்போனார்.
‘என்ன ஆயிற்று?’ என்று நண்பர் குபிசெக் கேட்டபோது ‘வாயை மூடிக் கொண்டு என் பின்னால் வா’ என்று ஹிட்லர் கர்ஜித்தார். அரைமணி நேரம் மௌனமாக நடந்த அவர்கள், ஃபிரெய்ன்பர்க் என்ற மலைமீதுள்ள பூங்கா ஒன்றில் உட்கார்ந்தார்கள்.

அங்கே உட்கார்ந்ததும் ஹிட்லர் அவரது நண்பரின் கையைப் பிடித்துக் கொண்டு வானத்து நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு பேசத் தொடங்கினார். அதுவரை அவர் அவ்வளவு அழகாகப் பேசியதில்லை.
அவர் மீது ஏதோ ஒரு மாயசக்தி ஏறியதைப்போல இருந்தது. ஹிட்லர், நண்பனுடன் பேசாமல் ஏதோ ஒரு பெரிய மக்கள் கூட்டத்திடம் பேசுவதைப் போல பேசிக் கொண்டிருந்தார்.
வசியக்கட்டுக்கு ஆளாகி, ஒருவித மயக்க நிலையில் அவர் பேசுவதைப்போல குபிசெக்குக்குத் தோன்றியது.
‘விரைவில் ஜெர்மன் மக்கள் ஒன்றுகூடி எனக்குத் தலைமைப் பதவியைத் தருவார்கள். நான் ஜெர்மனியை ஒருங்கிணைத்து இதுவரை இல்லாத அளவுக்கு அதை உச்சத்துக்குக் கொண்டு போவேன்.

அரசியல் கொள்கை, ராணுவம், சமூகம், கலாச்சார ரீதியாக ஜெர்மன் நாடு மிக உயர்ந்த நிலைக்குப் போகும்’ என்று ஹிட்லர் கூறினார். குபிசெக் இதைக்கேட்டு அப்போது மனதுக்குள் சிரித்திருக்க வேண்டும்.
அந்தக் காலகட்டத்தில் வறுமையின் பிடியில் வாடிய ஹிட்லர் ஓவியராக முயன்று தோற்றுப் போனார். அவரது ஓவியங்கள் ஒருசில நாணயங்கள் வரையே விலைபோயின.

நண்பர்கள், உறவினர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் வாடிய ஹிட்லர், அதன்பிறகு ரியன்சி இசைநாடகத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.
ஆனால், தனக்கு முன்னால் மிகப்பெரிய வாழ்க்கை ஒன்று இருப்பதை மட்டும் ஹிட்லர் புரிந்து வைத்திருந்தார். தன் எதிர்கால வாழ்க்கையில் நடக்கப் போவதை ஆறாம் அறிவின்மூலம் அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தார்.

முதல் உலகப்போர் வெடிப்பதற்கு சில காலம் முன்பு நண்பர்கள் இருவரும் பிரிந்து போனார்கள். 1939-ல் இரண்டாம் உலகப்போர் வெடிக்கும் வரை இருவரும் சந்திக்கவில்லை.
அதன்பிறகு ஜெர்மனியின் சான்சிலராக மாறிய ஹிட்லரைத்தான் குபிசெக்கால் பார்க்க முடிந்தது.
அப்போது, 27 ஆண்டுகளுக்கு முன், லின்ஸ் நகரில் தாங்கள் பார்த்த நாடகத்தை ஹிட்லருக்கு குபிசெக் நினைவுபடுத்தினார். ஜன்னல் வழியாக தனது ராணுவ வாகன அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்த ஹிட்லர் அப்போது சொன்னார்:

‘அந்த நாடகம் பார்த்த கணத்தில் இருந்துதான் இது தொடங்கியது’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *