ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் உங்களது பொறுப்புகளை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்

இஸ்லாம் பல பிரதேசங்களுக்கும் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஒருமுறை ஃகலீபா அவர்கள் தமது ஆட்சியின் கீழ் சிரியாவின் ஹிம்ஸ் பிரதேசத்துக்கு மக்களின் குறை கேட்பதற்காகப் பயணிக்கிறார்கள். அங்குள்ள மக்கள் தமக்கென நியமனம் செய்யப்பட்டிருக்கும் கவர்ணர் குறித்து சொல்லத் துவங்குகிறார்கள்.

ஹிம்ஸ் வாசிகள் : அமீருல் முஃமினீன் அவர்களே! நாங்கள் எங்கள் கவர்ணர் குறித்து நான்கு குறைகளை வைத்திருக்கிறோம்.

ஃகலீபா உமர் : உங்கள் குறைகளை கூறுங்கள்..!

ஹிம்ஸ் வாசிகள் : கவர்ணர் அவர்கள் சூரியன் உச்சமடைந்து பகல் பொழுது ஆகும்வரைக்கும் மக்களாகிய எங்களிடம் வருவதில்லை.

ஃகலீபா உமர் : அடுத்து ?

ஹிம்ஸ் வாசிகள் : நாம் இரவில் ஏதும் தேவைகளுக்கு அழைத்தால் எமக்கு பதில் கொடுப்பதில்லை.

ஃகலீபா உமர் : இன்னும் இருக்கிறதா?

ஹிம்ஸ் வாசிகள் : ஆம். அவர் மாதத்தில் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறவே மாட்டார். எம்மால் அவரைப் பார்க்கவும் முடியாது.

ஃகலீபா உமர் : அடுத்து என்ன குறை?

ஹிம்ஸ் வாசிகள் : சில நேரம் இவர் மயங்கிக் கீழே விழுந்து விடுகிறார்.

ஃகலீபா உமர் (தனக்குள் முணுமுணுத்தவராக) : யா அல்லாஹ் ! நான் அவரைப் பற்றி நலவுகளைத்தானே அறிந்துவைத்திருக்கிறேன்.
அல்லாஹ்வே ! உனது நல்லடியானாகத்தான் அவரைக் பார்க்கிறேன்.

ஃகலீபா உமர் உடனே கவர்ணரை அழைக்கிறார்கள். அப்போது ஹிம்ஸ் கவர்ணர் ஸஈத் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அங்கே ஆஜராகிறார்கள்.

ஃகலீபா உமர் : ஸஈதே ! மக்கள் உன்னைப் பற்றி இவ்வாறெல்லாம் குற்றம் சொல்கிறார்களே … இதன் உண்மைத் தன்மை என்ன?

ஸஈத் இப்னு ஆமிர் : அமீருல் முஃமினீன் அவர்களே ! நான் இவற்றுக்கான காரணங்களைக் கூற சங்கடப்படுகிறேன். நிச்சயமாக எனது வீட்டு வேலைகளுக்காக பணியாட்கள் எவருமே இல்லை. நான்தான் மாவு அரைத்து புளிக்கச் செய்து ரொட்டியை சுட்டு சாப்பிட்டு விட்டு, பின்பு ழுஹா தொழுதுவிட்டு வருவதற்குள்ளே பகல் பொழுதாகிவிடுகின்றது.

ஃகலீபா உமர் : புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! இரண்டாவது காரணம் என்ன?

ஸஈத் இப்னு ஆமிர் : எனது பகல் பொழுது முழுவதும் மக்களுக்குச் சொந்தமானது. அதனால் எனது ரப்புக்கு என் இரவுப் பொழுதுகளை ஒப்படைத்து விடுகிறேன். அப்போது எனது நேரத்தை மக்களுக்கு அளிக்க நான் விரும்புவதில்லை.

ஃகலீபா உமர் : மூன்றாவதாக உமக்குக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உமது பதில் என்ன ஸஈத்?

ஸஈத் இப்னு ஆமிர்: எனக்கு அணிவதற்கு ஒரே ஒரு ஆடைதான் உள்ளது. மாதத்தில் ஒருநாள் அதனை நான் கழுவிவிட்டு உலரும் வரைக்கும் காத்திருக்கவேண்டி இருக்கிறது. அதனால் எனக்கு அந்நாளில் வெளியில் வர முடிவதில்லை.

ஃகலீபா உமர் : அப்படியாயின், சில நேரம் நீங்கள் மயக்கமடைந்து வீழ்வதாக மக்கள் கூறுகின்றனரே…

ஸஈத் இப்னு ஆமிர் : ஆம்… உண்மைதான். நான் இஸ்லாமைத் தழுவும் முன்பு ஃகுபைப் பின் அதி(ரழி) அவர்கள் கொல்லப்படுவதை என் கண்களால் பார்த்தேன். குறைஷிகள் அவரை அறுத்து, வெட்டி, குற்றுயிராக ஆக்கிக் கொண்டிருந்தனர். ரத்தம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கையில் காபிர்கள் அவரிடம் “ஃகுபைபே! இவ்விடத்தில் உனக்குப் பதிலாக முஹம்மத் இருந்திருக்கலாமே என நினைக்கிறாய்தானே..” எனக் கேட்க “இங்கு நானும் என் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க முஹம்மத் மீது ஒரு முள் குத்துவதற்குக் கூட விடமாட்டேன்.” என ஃகுபைப் ஆக்ரோஷமாகப் பதிலளிக்கிறார்கள். கோபமடைந்த காபிர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர். ஒரு சாட்சியாக இருந்து அவரைக் காப்பாற்றாமல் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தேன் என்ற எண்ணமும் கைசேதமும் ஏற்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து உள்ளம் நடுங்கி விடுகிறது. என்னை அறியாமல் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிடுவேன்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஃகலீபா உமர் “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நான் ஸஈத் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குக் களங்கம் ஏற்படவில்லை.” எனக் கூறுகிறார்கள்.

“நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பொறுப்புகளை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *