கொழும்பில் உள்ள அனைத்து தோட்டங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும், சமூக தொற்று பரவல் குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் உள்ளவர்களை கொரோனா வைரஸ் தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் கொழும்பு மாநகர சபைடின் பிரதான வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளுடனான விஷேட கலந்துரையாடலின் போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை கொழும்பு மாநகர சுகாதார வைத்திய அதிகாரியின் கீழ் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அடையாளம் காணப்ப்ட்டுள்ள பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் , 15 பேர்ச் நிலப்பரப்பில் 200 பேர் வரை வசித்துள்ளனர்.

அதில் சிகிசை அலங்கார நிலையம் வேறு இருந்துள்ளது. அங்கு வசித்தவர்கள் அப்பகுதி தோட்டங்களில் உள்ளவர்களுடன் மட்டுமல்லாமல், அதனை அண்டிய பல பகுதிகளில் உள்ளோருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் அதிக மக்கள் குறைந்த இடப்பரப்பில் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ள சூழலில் கொரோனா தொற்று பரவுவதற்கான சூழல் அதிகமாகும்.

எனவே இந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி கொழும்பில் எழுமாறாக கொரோனா குறித்து பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

இதில் குறிப்பாக, கொழும்பில் தோட்டங்கள் என அறியப்படும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை மையப்படுத்தி இந்த பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளது. ‘ என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதனிடையே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் உள்ள சில தோட்டங்களை சேர்ந்தோர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்ட்டுள்ள நிலையில் அவர்கள் விஷேட கொரோனா குறித்தான பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிலியந்தலை பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர், நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்ததன் காரணமாக, பேலியகொடை மீன் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் உட்பட 500 பேரிடம் கொரோனா தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

குறித்த பிலியந்தலை தொற்றாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றிய முறைமை தொடர்பில் இதுவரை எந்த வெளிப்படுத்தல்களும் இல்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இது குறித்து தொடர்ந்த பரிசோதனைகளில், அந்த தொற்றாளரின் குடும்பத்தார் 11 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்றில்லை என தெரியவந்துள்ளது.

அதே நேரம் கொழும்பின் பொரளஸ்கமுவ பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் மனைவி, அவர் சிகிச்சை பெற்ற பன்னிப்பிட்டிய பகுதி தனியார் வைத்தியசாலையின் ஊழியர்கள் உட்பட 69 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இந் நிலையில் குறித்த நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து தெளிவின்மை தொடர்கின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே கொழும்பில் சமூகப் பரவல் ஆரம்பித்துள்ளதா என சந்தேகிக்கப்படும் நிலையில், கொழும்பு முழுவதும் மக்கள் செறிவாக வாழும் தோட்டங்களை மையபப்டுத்தி பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *