அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படும்

மும்பையில் பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டில்லி பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சீனாவில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,601 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பல மாநிலங்களில் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 28 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் 171 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த 53 பேரும் அறிகுறியற்றவர்கள் என்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடத்தப்பட்டதைப் போல டில்லியில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் டுவிட்டரில் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு, ‛நிச்சயமாக நாங்கள் அதை செய்வோம்,’ என கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். எனினும் விரிவாக எதுவும் விளக்கவில்லை. டில்லியில் இதுவரை மொத்தம் 2081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நேற்று மட்டும் 78 பேர் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *