கொரோனாவின் உண்மைத் தன்மையை கண்டுபிடித்தே தீருவோம்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது. இது, வுகானின் ஹூனான் கடல் உணவு சந்தையில் இருந்து பரவியதா அல்லது பல வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்யும் வுகான் வைரஸ்  ஆய்வகத்தில் இருந்து பரவியதா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில், வுகான் ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்திருப்பதாகவும், அதனை அமெரிக்க உளவு அமைப்புகள் தீவிரமாக விசாரிப்பதாகவும் அமெரிக்காவின் முன்னணி செய்தி சேனலான பாக்ஸ் நியூஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டது.  இது குறித்து, வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப்பிடம் கேட்டதற்கு, ‘‘வுகான் ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியதாக வரும் தகவல்களை நாங்கள் கவனிக்கிறோம். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒருவிதமான வவ்வாலிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வவ்வால் வுகான் சந்தையில் இல்லை. அங்கிருந்து 40 மைல் தொலைவில்தான் அது காணப்படுகிறது. இதில் நிறைய விசித்திரமான விஷயங்கள் உள்ளன. நிறைய விசாரணை நடக்கிறது. உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம். இந்த வைரஸ் சீனாவில் எங்கிருந்து வந்தாலும், எந்த வடிவத்தில் வந்தாலும் அதனால் 184 நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன,’’ என்றார். வுகான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் ஆய்வு நடத்த அமெரிக்க நிதி உதவி அளித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘‘அது முந்தைய அதிபர் ஒபாமா ஆட்சி நிர்வாகத்தில் ரூ.30 கோடி நிதி உதவி அளித்தது. அதை நாங்கள் உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்.

போராட்டம் வெடித்ததால் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிறார்:
அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு படுபயங்கரமாக இருக்கும் நிலையில் அதிபர் டிரம்ப், திடீரென 3 கட்டமாக ஊரடங்கை தளர்த்த அனுமதி வழங்கினார். இதற்கான முடிவை அந்தந்த மாகாண ஆளுநர்களே எடுப்பார்கள் என்றார். டிரம்பின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், ஊரடங்குக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் அதிகரித்து வரும் போராட்டங்கள்தான். வேலைவாய்ப்பை இழந்த பலர் வீதிக்கு வந்து போராடத் தொடங்கி விட்டனர். இதனால், ஊரடங்கை தளர்த்தும் முடிவை ஆளுநர் தலையில் கட்டிவிட்டு நழுவிக் கொண்டார் டிரம்ப்.

இது மட்டுமின்றி போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நேற்று அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘மின்னேசொடா, மிச்சிகன், விர்ஜினியா மாகாணங்களை விடுவியுங்கள்,’ என கூறி உள்ளார். விரைவில் நடக்க உள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டே டிரம்ப் இவ்வாறு அரசியல் செய்வதாக கூறப்படுகிறது. மேற்கண்ட 3 மாகாணமும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் வசமுள்ளவை. அங்குள்ள ஜனநாயக கட்சி ஆளுநர்கள் டிரம்ப் முடிவை ஏற்கவில்லை. ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 2 ஆளுநர்கள் மட்டுமே டிரம்ப் முடிவை பரிசீலித்து முதற்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். மற்ற அனைத்து ஆளுநர்களும் ஜூன் வரை ஊரடங்கை தளர்த்தும் எண்ணமில்லை என கூறி விட்டனர். இந்த அரசியல், ஆபத்தில் முடியும் என டிரம்ப்புக்கு அவர்களின் ஆலோசகர்கள் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *