ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் இருபது பேருக்கு கொரோனா

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஆப்கானிஸ்தானில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஊரடங்கு மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் அங்கே மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இதுவரை 933 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 33 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க சரியான சுகாதார வசதிகள் இல்லை. ஆப்கானிஸ்தான் நாடு, ஏற்கனவே உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை  எதிர்த்துப் போராடுகிறது. அதே நேரத்தில் தலிபான்களுடன் வன்முறை மோதல்கள்  தொடர்கின்றன.
அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அஷ்ரப் கானி சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால், அஷ்ரப் கானியின் போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும் தன்னை ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அதிபர் மாளிகையில் அஷ்ரப் கானி வசித்து வருகிறார். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் பணியாளர்களின் 20 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜனாதிபதி மாளிகையில் பணிபுரியும் சுமார் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால் இந்த செய்தி பொதுமக்களிடம் வெளியிடப்படவில்லை’ என்றார். இருப்பினும், ஜனாதிபதி அஷ்ரப் கானியின் செய்தித் தொடர்பாளரும் ஆப்கானிஸ்தானின் சுகாதார  அமைச்சகமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. மேலும், அஷ்ரப் கானியும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிவிட்டாரா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *