தமிழ் திரைப்படத்துக்கும் இந்தி திரைப்படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

வந்திருப்பது யார் என்ற கேள்வியுடன் நிமிர்ந்து பார்க்கும் அந்த விழிகளில் நீலம் (கான்டாக்ட் லென்ஸ்) நிச்சயம் புதிது.
‘மூன்றாம் பிறை’யில் சுப்பிரமணி, சுப்பிரமணி என்று துள்ளிச் சிரித்து, கரிய வட்டக் கண்கள் மிரள விரித்த அப்பாவிப் பெண் இல்லை இது.

இது புதிய ஜனனம்.

பம்பாய், பாந்திராவில் இருக்கும் மெஹ்பூப் ஸ்டூடியோவில், ‘ஹீா் ராஞ்ஜா’ படப்பிடிப்புக்குத் தயாராகும் நிலையில் ஒப்பனை அறையில் அமர்ந்து இருக்கும் ஸ்ரீதேவியிடம் வெள்ளித் திரையில் தெரியும் குழந்தைத்தனமும் குறும்பும் உதட்டுச் சுழிப்பும் இல்லை.

ஒப்பனைக்கு அடியில் இருக்கும் ஸ்ரீதேவி யார் என்று கண்டுபிடிப்பது கடினம்.

ஆனால், அசத்தும் அந்த அழகில் திரையில் வெளிப்படாத ஒரு விவேகமும் முதிர்ச்சியும் அளவான ஜாக்கிரதையான பதில்களில் தெரிகிறது.
கண்ணாடியைப் பார்த்து தானே முகத்துக்கு ஒப்பனை செய்தபடி பேசும் சரளமான ஆங்கிலத்தில், இந்தியில், தமிழில் ஒரு தேர்ந்த நாகரீகம், சொஃபிஸ்டிகேஷன் தென்படுகிறது.
இடையில் எட்டிப்பார்க்கும் யூனிட்டைக் கையாளும் லாவகத்தில் இருப்பது தன்னம்பிக்கை மட்டுமல்ல, நிர்வாகத் திறமையும்தான்.
அறைக்கு வெளியே ஆட்டோகிராப்க்காக கல்லூரி மாணவிகள் சிலர் நிற்கிறார்கள். ஷாட்டுக்குச் செல்லும் அவசரத்துடன் விரைந்து கையெழுத்திட்டுச் செல்லும்போது கூட்டமும் பிரமிப்புடன் விரைகிறது.

ஸ்டுடியோ கூடத்தில் விளக்குகள் ஸ்ரீதேவியைச் சுற்றிப் பளிரிடுகின்றன.

ஆக்‌ஷன் என்ற வார்த்தைக்கு மந்திரசக்தி இருக்கவேண்டும்.
சற்றுமுன் சிரித்துப் பேசிய முகம் மின்னலாய் மாறுகிறது.  கனவு கண்ணில் நீர் நிறைகிறது. மிதமிஞ்சிய சோகம் முகத்தில் நிழலாடுகிறது.

ஒரே நிமிஷ ஷாட்டுக்குப் பிறகு ‘கட்’ என்ற ஒலியில் மாயமாய் சோகம் விலகுகிறது.

லைலா-மஜ்னு மாதிரியான காதல் கதை என்று விளக்கியபடி ஸ்ரீதேவி அமர்கிறார்.
ஹீா்தான் கதாநாயகி. ராஞ்ஜா என்கிறவனை காதலிக்கிறார். அவளுக்கு இஷ்டம் இல்லாத ஒருத்தனுக்குக் கல்யாணம் செய்து வெச்சுடுறாங்க.

கல்யாணம் முடிஞ்சு புருஷன் வீட்டுக்குக் கிளம்புற காட்சி இன்னிக்கு.”
ஷூட்டிங்குக்கு இடையே அவர் அளித்த பேட்டியில் சில பகுதிகள்…

கேள்வி  : தென்னிந்தியாவிலிருந்து இங்க வந்த நீங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து இத்தனை நாளா நிலைச்சு இருப்பது எப்படி?
பதில் : தெரியலே, ஒரு படத்தில் நடிக்கணும்தான் வந்தேன். எப்படியோ மேலே மேலே சான்ஸ் வந்தது. இந்திப் பட உலகிலு இத்தனை பிரபலமாவானு அப்ப நினைக்கல.

கேள்வி : தமிழ்நாட்டு நடிகைகள் இந்தி வட்டாரத்திலே பாப்புலர் ஆவதற்கு என்ன காரணம்?
பதில் : இக்கரைக்கு அக்கரை பச்சை. இங்கயிருந்து அங்க போறவங்க.. அங்க பாப்புலர் ஆகுறாங்க.. குஷ்பு போல வடநாட்டு நடிகைகள் நல்ல பெயர் எடுத்து இருக்காங்களே?
தென்னிந்திய நடிகைகளுக்கு சுலபமா டான்ஸ் ஆட வர்றதும், அவங்க பாப்புலாரிட்டி இங்க காரணமா இருக்கலாம்.

கேள்வி : இந்திப் பட உலகம் தென்னிந்திய பட உலகத்திலிருந்து ரொம்ப மாறுபட்டிருக்கு. நீங்கள் எப்படி அட்ஜஸ்ட் செய்து கொண்டீர்கள்?

பதில் : இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியலே. நம் வேலை உண்டு. நாம உண்டு இருந்தா. எங்கேயும் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

கேள்வி : நீங்கள் மற்ற நடிகர்களோடு ரொம்ப பழகுவதில்லை என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.

பழக்கம் வைத்துக்கொண்டால் வம்பு என்று ஒதுங்கி இருக்கிறீர்களா?

பதில் : (சிரிக்கிறார்) அதுவே முக்கிய காரணம் இல்லை. நான் சுபாவத்திலே ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவ.

வெளி சினேகிதம் எப்பவுமே வெச்சுக்கிட்டதில்லே. வீட்டு மனுஷங்கதான் எனக்கு நெருக்கமானவங்க. நீங்க வடக்குக்கும் தெற்குக்கும் வித்தியாசம் இருக்கான்னு கேட்டீங்க.

ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. இங்கே பத்திரிகைங்க ரொம்ப மோசம். மெட்ராஸ்ல நம்ம நடிப்பைப் பத்தி எழுதுவாங்க. மற்றபடி சொந்த வாழ்க்கையைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் எழுத மாட்டாங்க.

இங்க விவஸ்தையே இல்லாம பொய்யை நிஜம் போல எழுதுவாங்க.

கேள்வி : நீங்க ஒதுங்கி இருக்கும்போதே…

பதில் : (சிாித்து) ஒதுங்கி இருக்கும்போதே! அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

கேள்வி : இந்தி முதலிலேயே தெரியுமா? வசனங்களை நீங்களே பேசுறீங்களா, இல்ல யாராவது குரல் கொடுக்கிறாங்களா?

பதில் : அய்யோ, யாரும் கொடுக்கறதில்லை நானே தான் பேசுறேன். முதல் படத்தில் மட்டும்தான் வேற குரல்.

அப்ப ஒரு வார்த்தை இந்தி வராது. பிறகும் முறையா கத்துக்கல. யூனிட்ல இருக்கிறவங்களோட பேசிப் பேசி வந்துவிட்டது.

கேள்வி : நடிப்பு என்கிறது உங்களை எப்படி பாதிக்கிறது? உதாரணமாக, சாவித்திரி ரொம்ப உணர்ச்சி வசப்படுவாராம் பாசமலர் கிளைமாக்ஸ் சீன் செய்தபோது மூன்று நாளைக்கு காய்ச்சல் வந்த மாதிரி சோர்ந்து போனாராம்.

பதில் : சாவித்திரி ரொம்ப பெரிய நடிகை. நான் அவங்களை ரொம்ப மதிக்கிறேன்.

ஆனால், என்னுடைய அணுகுமுறை வேறு. ஷூட்டிங் முடிஞ்சதும் அதை மறந்திடுவேன்.

ஒரு நடிகைனா அப்படித்தான் இருக்கணும்னு என் அபிப்ராயம். அழுன்னா அழணும். சிரின்னா சிரிக்கணும். எனக்கு இன்னிக்கு மூடு அவுட், சிரிக்க முடியாதுன்னு சொல்லக் கூடாது.

கேள்வி : உங்களை விட இளைஞரான சல்மான்கானோடு நடிப்பது உங்களுக்கு எப்படி இருக்கும்?

பதில் : (லேசாக முறைத்து) யார் சொன்னது, சல்மான்கான் என்னைவிடச் சின்னவர்னு. நிச்சயமா சொல்றேன், அவங்க யாரும் என்னைவிடச் சின்னவங்க இல்ல.

நான் 15 வருஷமா சினி ஃபீல்டில் இருக்கிறதாலே, என் அனுபவத்தை வச்சு எனக்கு வயசாயிட்டதுன்னு நினைக்கிறாங்க.

கேள்வி : பெண்ணியவாத சிந்தனைகள் உண்டா?

பதில் : (பெரிய கும்பிடு) ஐயோ அதுக்கெல்லாம் போறது இல்லைங்க.

கேள்வி : அதைப்பத்தி நினைக்கிறதுகூட இல்லையா?

பதில் : எனக்கு அதற்கெல்லாம் எங்கங்க நேரம். எனக்கு அது தேவையும் இல்லை. தினமும் 18 மணி நேரம் வேலை செய்கிறேன். அதுக்கப்புறம் எப்பப் படுப்போம்னு தான் இருக்கு.

கேள்வி : நீங்க நடிக்கிற படத்தில, பெண்ணை இழிவுப் படுத்தற மாதிரி ஒரு பாத்திரபடைப்பு இருக்குன்னு வெச்சுக்கோங்க. அப்பவும் நமக்கு எதுக்கு வம்புன்னு சும்மா இருந்துடுவீங்களா?

பதில் : அப்படி இருந்தா நிச்சயம் சொல்வேன். ஆனால், அப்படி ஒரு சந்தர்ப்பமும் எனக்கு ஏற்படவில்லை.

கேள்வி : நடிகைகளில் நீங்க நம்பர் ஒன் ஸ்டார். ஆனா நம்பர் ஒன் நடிகருக்குக் கிடைக்கிற தொகை உங்களுக்குக் கிடைக்கிறதா?

பதில் : இதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது.

கேள்வி : அரசியலில் சேர உத்தேசமா இருக்கா?

பதில் : (பெரிய கும்பிடு போட்டுச் சிரிக்கிறார்) அப்பா, அங்கிள் எல்லோரும் இருந்தார்கள். ஆனால் நான் அரசியலில் நுழைய மாட்டேன்.

கேள்வி : ஏன்? ஜெயலலிதா வந்த மாதிரி நீங்க வர முடியாதா?

பதில் : அதுக்கெல்லாம் வேற விதமான மூளை, கெட்டிக்காரத்தனம் வேணும். எனக்கு அது கிடையாது.  இன்ட்ரஸ்ட் இல்லை.

கேள்வி : சமீபத்தில் உங்க அப்பா இறந்துபோனதால ஏற்பட்ட பாதிப்பா?

பதில் : அப்பா இறந்தது பெரிய இழப்புதான். அம்மாவை விட அவங்க கிட்ட நான் நெருக்கமாக இருந்தேன். ஆனா, அரசியல்ல சேர எனக்கு இஷ்டம் இல்லாததற்கு அவங்க இறந்தது காரணமே இல்லை.

கேள்வி : எதிர்கால பிளான் ஏதாவது இருக்கிறதா?

பதில் :  குறிப்பிட்டுச் சொல்லும்படியா ஒன்றும் இல்லை. கல்யாணம் செய்துக்குவேன், குழந்தை பெற்றுக் கொள்வேன்.

கேள்வி :  உண்மையான ஸ்ரீதேவி எப்படிப்பட்டவர்?

பதில் : (சிரிக்கிறார்) சரியான சோம்பேறி. சாப்பிட பிடிக்கும். தூங்க பிடிக்கும். (she is bore) சுவாரஸ்யமானவ இல்லை.

‘ஷாட் ரெடி’ என்று குரல் கேட்கிறது.

ஸ்ரீதேவி எழுந்திருக்கிறார். கண்ணாடியில் மீண்டும் மீண்டும் ஒப்பனையைச் சரி செய்கிறார்.

டைரக்டரிடம் ஏதோ ஜோக் அடித்து அடுத்த நொடி ‘லைட்ஸ் ஆன், ஆக்சன்’ என்று குரல் எழுப்பிதும் விசை அழுத்தியதுபோல சடக்கென்று கரு நீல விழிகளில் நீர் தழும்புகிறது.

துக்கம் குமுறி மெல்லிய உதடுகள் துடிக்கின்றன. துக்கத்துடன் முகத்தைத் திருப்பி நடக்க, ‘கட்’ என்ற ஒளியில் மாயை விலகுகிறது.

கண்ணை நாசுக்காகத் துடைத்துக் கொண்டு திரும்பிச் சிரிக்கும்போது எதிரில் நிற்பவர் நிஜமில்லை, நீர் கோர்க்கும் கண்ணுடன் நின்ற ஹீர் தான் நிஜம் என்று தோன்றுகிறது.

– ‘இந்தியா டுடே’ 1991 அக்டோபா் மாத இதழில் வாஸந்தி எடுத்த நோ்காணல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *