கொரோனா தடுப்புப் பணிக்காக பிறந்த ஒரு மாத குழந்தையுடன் பணிக்கு திரும்பிய அதிகாரி

ஆந்திராவில், கொரோனா தடுப்புப் பணிக்காக பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மாளா. 2013-ல் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்ற இவர் தற்போது கைக்குழந்தையுடன் அலுவகலத்தில் அமர்ந்துள்ள புகைப்படம் பலரது பாராட்டுக்களுடன் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதைத் தனது கடமை என்று கூறும் ஸ்ரீஜனா, “ஒரு சராசரி மனிதனாக நிர்வாகத்திற்கு ஏதேனும் வழியில் உதவியாக இருப்பது என்பது எனது கடமை.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்க வேண்டிய நேரம் இது என்பதை நான் உணர்கிறேன்” என்கிறார்.
அரசு விதிமுறைப்படி, பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது. ஆனால் இந்தச் சேவையை  தன்னுடைய அதிமுக்கியக் கடைமையாக நினைக்கிறார் ஸ்ரீஜனா.

இந்த விஷயத்தை அறிந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், அந்த பெண் அதிகாரியைப் பாராட்டியதுடன், கடமைக்கான அழைப்பில் பங்கேற்றதற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற கொரோனாவுக்கு எதிரான வீரர்களைக் கொண்டிருப்பது நாட்டிற்கு அதிர்ஷ்டமானது. கடமைக்கான அர்ப்பணிப்பாக வாழும் உதாரணத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் ஐஏஎஸ் அதிகாரியின் புகைப்படத்துடன் ட்விட் செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 308ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,152 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *