புற்றுநோயால் துடித்த மனைவியை சைக்கிளில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற முதியவர்

58 வயது முதியவர் ஒருவர், நோயால் துடித்த தனது மனைவியை சைக்கிளிலேயே கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

புதுச்சேரியில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை. இங்கு #கேன்சருக்கான சிகிச்சை அளிக்கப்படுவதால் தமிழகத்தின் பலமாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் வயதானவர் ஒருவர் தனது மனைவியை சைக்கிளின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஜிப்மர் மருத்துவமனைக்குள் வந்தார். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டனர். அதற்கு கேன்சர் சிகிச்சை பிரிவுக்கு என்று கூறியுள்ளனர். அவர்களும் அதற்கான இடத்தை காண்பித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த கட்டடத்தின் வாயிலில் சென்று சைக்கிளோடு களைப்புடன் அமர்ந்தார்கள் அந்த தம்பதிகள்.

இதைப் பார்த்த பாதுகாவலர்கள் அந்த முதியவரிடம் சைக்கிளை இங்கே விடக்கூடாது என்று கூறி அதற்கான இடத்தை காட்டினர். அப்போது தான் அந்த 58 வயது முதியவர் சொன்னார். எனது மனைவி கேன்சர் நோயால் அவதிப்படுகிறார். கடந்த மாத சிகிச்சைக்கு வந்தபோது இன்றைய தேதிக்கு பரிசோதனை செய்ய வரச்சொன்னார்கள். எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். பேருந்து போக்குவரத்து எதுவும் இல்லை.

வாடகை காரிலோ ஆம்புலன்ஸிலோ வர கையில் பணம் இல்லை. அதனால் மனைவி மஞ்சுளாவை சைக்கிளில் அமர வைத்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து 140 கி.மீட்டர் தூரம் மிதித்து வந்தது களைப்பாக உள்ளது. சிறிது ஓய்வுக்கு பின் சைக்கிளை பார்க்கிங்கில் போடுகின்றேன் என மூச்சு வாங்க முதியவர் அறிவழகன் சொல்ல அதிர்ந்து போனார்கள் ஜிப்மர் மருத்துவமனை பாதுகாவலர்கள். இந்த விவகாரத்தை ஜிப்மர் நிர்வாகத்திற்கு பாதுகாவலர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர்களுக்கு தேவையான சிகிச்சையை முன்னுரிமை அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மஞ்சுளாவை கேன்சர் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு தற்போது எடுக்க ண்டிய மருந்துகளையும் கொடுத்தும் அனுப்பினர். மனைவிக்கு சிகிச்சை கிடைத்த மகிழ்ச்சியில் 140 கி.மீட்டர் தூரம் சைக்கிளை மிதித்து வந்த களைப்பு நீங்கி மீண்டும் 140 கி.மீ தூரம் செல்ல உற்சாகத்துடன் வெளியே வந்து சைக்கிளை பார்த்தார் அறிவழகன்.

ஆனால் சைக்கிள் காணவில்லை. அருகில் இருந்த பாதுகாவலர்களிடம் கேட்டார். அதற்கு பாதுகாவலர்கள் உங்களது சைக்கிள் இந்த வாகனத்தில் உள்ளது. இதில் ஏறி உட்காருங்கள். உங்களது சொந்த ஊருக்கே கொண்டு சென்று விட்டு விட்டு வருகின்றோம் என்று கூறினர். இதையடுத்து மட்டற்ற மகிழ்ச்சியில் தனது மனைவியின் முகத்தை பார்த்து சிரிப்போடு ஏறி அமர்ந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார் அறிவழகன். கொரோனா கற்றுத்தரும் பல்வேறு பாடத்தில் இந்த பாசப்பறவைகளின் போராட்டமும் வெளிப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *