பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிப்பதற்கு உயர் நீதிமன்றம் நாடுவதற்கான தேவை எழவில்லை

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிப்பதற்காக உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கான தேவை எழவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பிய கடிதத்திற்கு இன்று பதில் கடிதம் அனுப்பப்பட்டது.

ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தல் COVID-19 வைரஸ் தொற்றால் பிற்போடப்பட்டது.

மே மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் வாக்கெடுப்பை நடத்த முடியும் என ஆணைக்குழு இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

அரசியலமைப்பிற்கு அமைய குறித்த திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, பாராளுமன்றம் இந்த வருடம் ஜுன் மாதம் முதலாம் திகதியிலாவது கூட வேண்டும்.

ஜூன் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக இருந்தால், மே மாதம் 27 அல்லது 28 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதுடன், அதற்கான முதற்கட்ட பணிகளை ஏப்ரல் 20 ஆம் திகதியாகும் போது ஆரம்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.

எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டால், தேர்தல் திகதி தொடர்பில் சிக்கல் எழுவதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்த சிக்கலை தீர்க்கும் வகையில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களை பெற்றுக்கொள்வதே உகந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்தது.

ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைப்பதற்கு முன்னதாக இந்த கடிதம் ஊடகங்களில் வௌியானமை தொடர்பில் அதிர்ச்சியடைந்ததாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் பொறுப்பு ஆணைக்குழுவிடமே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகளில் தலையீடு செய்வதற்கு ஜனாதிபதி எண்ணவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24/3 சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, 14 நாட்களுக்கு குறையாத காலத்தில் அதாவது ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை 15 ஆவது நாளிலேனும் நடத்த முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அரசியலமைப்பின் 129 ஆவது சரத்தின் பிரகாரம், உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கான தேவை எழவில்லை என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு ஆலோசனை கிடைத்துள்ளதாக பீ.பி.ஜயசுந்தர தனது கடிதத்தின் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *