எந்தச் சூழ்நிலையிலும் நமக்கானதாக மாற்றிக் கொள்வோம்


உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் உயிாிழந்துள்ளனா்.
தொடா்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்து, ரயில் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

இதனால்  மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான அலுவலகங்கள், தங்களது அலுவலா்களை வீட்டிலிருந்தே பணிபுாிய அறிவுறுத்தியுள்ளது.
இதனால் மருத்துவம், காவல், ஊடகம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்ற அனைவரும் வீட்டிலிருந்தே (work at home) பணியாற்றி வருகின்றனர்.

வீட்டிலிருந்து பணியாற்றுவது பலருக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரத்திற்கு கிளம்பிச் செல்வது, போக்குவரத்து நெரிசல், பணி நேரம் போன்ற பிரச்சனைகள் ஏதுமின்றி ஹாயாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் கூடுதல் பொறுப்புப் பெண்களுக்கு. வீட்டையும் கவனித்துக் கொண்டு பணிச் சூழலையும் கவனிக்க வேண்டியது அவர்களுக்கு பொறுப்பு.

அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் சொல்லவே தேவையில்லை.
பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும் குழந்தைகளைப் பராமாிப்பது என்பதே பெண்களுக்கு சவாலாக இருந்து வரும் சூழலில், தோ்வுகளை ரத்து செய்து, தொடா் விடுமுறை அளித்துள்ளது அவா்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கணவா் மற்றும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் பணிகளுக்கிடையில், நாள் முழுவதும் தொடரும் வீட்டு வேலைகளால் பெண்களுக்கு முற்றிலும் ஓய்வு எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால் பெண்களுக்கு சற்று இறுக்கமான மனநிலை ஏற்பட்டாலும், தற்போது நிலவும் சூழல் குழந்தைகளுக்கு முற்றிலும் புதிது என்பதால், தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் அவா்களைப் பார்த்துக் கொள்வது அவசியம்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நாட்களில் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாத நிலை இருக்கும். தற்போது அவா்களுடன் நேரம் செலவழிக்கக் கூடிய தருணம் கிடைத்துள்ளது.
அரிதாகக் கிடைத்துள்ள இந்தத் தருணத்தை குழந்தைகளுக்குப் பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும்.

புத்தக வாசிப்பு, ஓவியம் வரைவது, மூளைக்கு வேளை போன்ற விளையாட்டுக்களைச் சொல்லித் தருவது என இந்த நேரத்தை நமக்கான நேரமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர்களுடன் நாமும் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் வகையிலான புத்தகங்களை வாசித்துப் பயனடைய வேண்டும்.

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பெண்கள், அலுவலக பணிகளுக்கு இடையே குழந்தைகளுக்கு நற்பண்புகளை எடுத்துரைக்கலாம்.

வீட்டில் இருக்கும் பெண்கள் உடற்பயிற்சி செய்வது, புத்தகம் வாசிப்பது, வீடுகளைச் சுத்தம் செய்வது, குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பது மற்றும் புதுவகையான உணவுப் பதார்த்தங்களை அவர்களுக்குச் செய்து கொடுப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்து பொழுதை இனிதாகக் கழிக்கலாம்.
எந்த நேரத்தையும், எந்தச் சூழலையும் நமக்கானதாக மாற்றிக் கொள்வது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியுடையதாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டிய தருணம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *