உலகை சுற்றிவருகின்ற கப்பலில் இருக்கும் இலங்கை இளைஞன் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை

உலகைச் சுற்றிவருகின்ற MSC Magnifica கப்பலில் இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவைக் கேட்டுள்ளார். இந்தக் கப்பல் நாளை இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது. அங்கு கப்பல் வந்தடைந்ததும் தன்னை இலங்கைக்குப் பொறுப்பேற்குமாறும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மிகவும் பணிவோடு அந்த இளைஞன் கேட்டுள்ளார்.

அந்தக் கப்பலில் பணியாற்றுகின்ற ஒரே இலங்கையரான அநுர பண்டாரவே அவ்வாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

அந்தக் கப்பலில் மொத்தம் 2700 பேர் இருப்பதாகவும், உலகைச் சுற்றிவருவதற்காக அந்தக் கப்பலானது சென்ற ஜனவரி மாதம் பயணத்தை ஆரம்பித்ததாகவும், கொரோனா வைரசு காரணமாக அந்தப் பயணமானது தடைப்பட்டு அவுஸ்திரேலியாவில் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் எந்தவொரு நாடும் இந்தக் கப்பலைப் பொறுப்பேற்க முன்வராததால் கப்பலின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இத்தாலியை நோக்கி மீண்டும் அந்தக் கப்பல் திரும்புவதற்காக, தன் பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடுகின்ற அநுர பண்டார, 25 நாட்களாக கப்பலில் ஆட்கள் இருப்பதாகவும், எந்தவொரு கொரானோ தொற்றுக்குள்ளானவரும் இந்தக் கப்பலில் இல்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த கப்பல் நாளைக் காலை 6 மணியளவில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்து, 3 மணித்தியாலங்கள் தங்கியிருக்கும். அந்த நேரத்தில் இலங்கைக்குத் தன்னைப் பொறுப்பேற்குமாறு அவர் கோரியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் தனக்கு இலங்கையில் இறங்கமுடியாது விட்டால், ஐரோப்பாவுக்குச் செல்ல வேண்டிவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *