இந்தியப் பிரதமர் அமைச்சர்களின் சம்பளம் 30 வீதத்தால் குறைப்பு

கொரோனா வைரஸ் நெருக்கடியைத் தொடர்ந்து, இந்திய பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் சம்பளத்தில் 30 வீதம் குறைக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இவர்களுக்கான சம்பளம் குறைக்கப்படவுள்ளதுடன், இந்த சம்பளக் குறைப்பு ஒரு வருடத்திற்கு நீடிக்கவுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்திய மத்திய அமைச்சர்களின் கூட்டத்தில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வௌியிடப்படுமென அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தமது சம்பளத்தின் 30 வீதத்தைக் குறைத்துப் பெறத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளத்தைக் குறைப்பதனால் பெற்றுக்கொள்ளப்படும் தொகை, நாட்டின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு செல்லவுள்ளது.

சம்பளத்தைக் குறைப்பதற்கான கட்டளைத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி ஆரம்பமாகியதன் பின்னர் கூட்டப்பட்ட முதலாவது அமைச்சரவைக் கூட்டம் காணொளி தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *