பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து எண்ணிப்பார்க்க முடியாது

நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைப் பார்க்கின்ற போது அடுத்த நான்கு மாதங்களிலேனும் பொதுத்தேர்தலை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய அரசியலமைப்புச் சிக்கலை கருத்தில்கொண்டே உச்சநீதிமன்றத்திடம் விளக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாக தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மகிந்த தேசப்பிரிய தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் போது தெரிவித்தார்.

சட்டச்சிக்கலுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டே இந்த ஆலோசனையை விடுக்க ஆணைக்குழு தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலை நடத்துவது தொடர்பில் உச்சநீதிமன்றின் விளக்கத்தை கோருமாறு நேற்றுமுன்தினம் ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனை தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சவால் குறித்து ஆணைக்குழு தலைவர் அளித்த பதில்கள் வருமாறு.

கேள்வி : தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை கருத்தில்கொண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி ஆணைக்குழு கூடித் தீர்மானிக்கும் என்று தானே கூறினீர்கள்?

பதில்: ஆம் அன்றிருந்த நிலைமைகளை கருத்தில் கொண்டே அவ்வாறு கூறினேன். ஆனால் இன்று நிலைமை மிக மோசமான தாகவே காணப்படுகிறது. பல்வேறு சவாலுக்கு முகம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதனால் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை நோக்கும் போது எந்த தீர்மானத்தையும் எம்மால் எடுக்க முடியாதுள்ளது.

எதிர் காலத்தில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கும் என மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சுகாதாரத்துறையும் சுட்டிக்காட்டியுள்ளன. இது நாட்டின் இயல்பு நிலையை கடுமையாக பாதிக்கலாம். இந்த நிலையில் தேர்தலொன்றை நடத்துவது குறித்து எண்ணிப் பார்க்க முடியாது உள்ளது. எம்மால் முடிவெடுக்க முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கான உரிய திகதியை நிர்ணயிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்படடிருக்கின்றோம். காலம் கடந்து கொண்டே போகின்றது. நாடு முழுவதுமே கொரோனாவுக்குள் மூழ்கியுள்ளது. நாம் எதிர் பாராதவை நடந்து கொண்டிருக்கின்றன.

கேள்வி: பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லை அரசியல் யாப்பில் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது?

பதில்: பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு இடையில் தேர்தல் நடத்தப்பட்டு பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். இதன்படி மார்ச் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜனாதிபதியால் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்ட பிரகடனத்தில் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு மேமாதம் 14 ம் திகதி பாரளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஏதேனும் காரணத்துக்காக உரிய காலத்தில் தேர்தலை நடத்த முடியாது போனால் மூன்று மாத கால இடை வெளிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் இன்றைய நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் கூட தேர்தலை நடத்த முடியாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எவ்வாறாயினும் ஜூன் மாதம் இரண்டாம் திகதியுடன் மூன்று மாதங்கள் நிறைவடைவதால் அந்தத் திகதிக்குப் பின்னர் அரசியலமைப்புச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரலாம் மேமாதம் 28ஆம் திகதி தேர்தலை நடத்த முடியுமானால் ஜூன் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்ட முடியும். இது சாத்தியப்படும் என்று எதிர்பார்க்க முடியாதுள்ளது.

கேள்வி: உரிய திகதிக்குள் தேர்தலை நடத்த முடியாது போனால் அரசியலமைப்புக்கமைய எடுக்க வேண்டிய நடவடிக்கை எவ்வாறாக உள்ளது?

பதில்: இவ்வாறான அரசியலமைப்புச் சிக்கல்கள் ஏற்படும் போது முரண்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளரைக் கோரியுள்ளேன். சட்டமா அதிபரூடாக உச்சநீதிமன்றின் பொருட் கோடல் வியாக்கியானத்தை கோருமாறு கேட்டுள்ளேன்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்றுமாதகால இடை வெளிக்குள் இந்த பெருட் கோடல் வியாக்கியானத்தை கோர வேண்டும் என்ற விதிக்கமைய நான் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றேன். அரசியலமைப்பு முரண்பாடுகளை தவிர்க்கும் பொருட்டே இந்த முடிவை எடுத்திருக்கின்றேம். தவறினால் சட்டச்சிக்கலை எதிர் கொள்ள நேரிடலாம்.

கேள்வி: இந்த உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தை தேர்தல் ஆணைக்குழு தலைவர் என்ற அடிப்படையில் உங்களால் கோரமுடியாதா?

பதில்: முடியாது. பாராளுமன்றக் கலைப்பு வர்த்தமானி பிரகடனத்தை வெளியிட்டு தேர்தலுக்கான திகதியையும் பாரளுமன்றம் கூடும் திகதியையும் ஜனாதிபதியே அறிவித்திருக்கின்றார். தேர்தல் ஆணைக்குழு அதனைச் செய்யவில்லை. வர்த்த மானியை பிரகடனப்படுத்தியதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற வியக்கியானத்தை ஜனாதிபதியே கோர வேண்டும்.

அதுமட்டுமல்ல உச்சநீதிமன்ற வியாக்கியானத்தை கோரும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே இருக்கின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் வேறு யாராலும் இவ்வாறு கோர முடியாது. அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உரியதாகும். அதனைக்கூட அவர் பாரளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைய முன்னரே கோர வேண்டியது அரசியலமைப்பு விதியாகும்.

கேள்வி: ஏற்கனவே வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் இரண்டு அறிவித்தலை விடுத்திருந்தீர்கள். இப்போது மூன்றாவது அறிவித்தலையும் விடுத்திருக்கிறீர்களே?

பதில்: வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அன்றைய தினமே நான் ஊடகங்களுக்கு முக்கிமானதொரு தகவலை வெளியிட்டேன். வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளாமல் தேர்தல் திகதியை ஒத்திப் போட முடியாது. ஆணைக்குழு ஏற்கனவே இது தொடர்பில் கலந்துரையாடியது. அதன் முடிவுக்கமைய தேர்தலை ஏப்ரல் 25ல் நடத்த முடியாததை தெரிவித்தேன். அதன் பின்னர் ஒரு வாரத்தில் விஷேட வர்த்தமானி மூலம் அதனை உறுதிப்படுத்தினோம். ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதாக தெரிவித்தேன்.

எனினும் அதன் பின்னர் இன்று வரையில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. முழு நாட்டிலும் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் குறித்து எந்தச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. சுகாதாரத்துறையும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கமும் தெரிவித்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்து வரும் நாட்களில் நிலைமை மிகவும் மோசமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தேர்தலை நடத்தக்கூடிய திகதியை எவராலும் உறுதிப்படுத்த முடியாதுள்ளது. எனது அவதானிப்பின் பிரகாரம் அடுத்த மூன்று மாதங்களிலாவது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குரியதாகும். அக்காலப்பகுதியாகும் போது ஜனாதிபதியின் பாரளுமன்றத் தேர்தல் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூன்று மாதங்களை தாண்டிவிடும். வர்த்தமானி அறிவித்தல் காலாவதியாகும் முன்பு தீர்வு எட்டப்பட வேண்டும். என்பதனால் தான் இன்றைய நிலையில் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதிக்கு விடுக்கத் தீர்மானித்தோம் இந்த விடயத்தில் உச்சநீதிமன்றின் வியாக்கியானத்திலேயே அடுத்த கட்ட நகர்வு குறித்து எண்ணிப் பார்க்கககூடியதாக இருக்கும்.

எம். ஏ.எம் நிலாம்

COMMENTS

Your name

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *