பிரிட்டனில் ஒன்பது நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட 4ஆயிரம் படுக்கைகள் கொண்ட வைத்தியசாலை திறப்பு

பிரிட்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 9 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட, 4000 படுக்கைகள் கொண்ட தற்காலிக வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு லண்டன் எக்செல் மாநாட்டு மத்திய நிலையத்தில் இத்தற்காலிக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. என்.எச்.எஸ். நைட்டிங்கேல் வைத்தியசாலை என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் வீடியோ இணைப்பு மூலம் இந்த வைத்தியசாலையை திறந்து வைத்தார்.

71 வயதான இளவரசர் சார்ள்ஸும் கொரோனா எனும் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், அவரின் தனிமைப்படுத்தல் காலம் 4 தினங்களுக்கு முன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேற்படி வைத்தியசாலையிலிருந்து சுமார் 530 மைல் தொலைவில் பேரக்ஹால் நகரிலுள்ள தனது இல்லத்திலிருந்தவாறு வீடியோ இணைப்பு மூலம் இவ்வைத்தியசாலையை திறந்துவைத்தார்.

பிரிட்டனில் 38168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 3605 பேர் உயிரிழந்துள்ளனர். 135 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *