அடுத்த வாரம் பாராளுமன்றம் கூட்டப்படும் சாத்தியக் கூறுகள்?

கொரோனா தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடியின் மத்தியில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டிருக்கின்றது. முக்கியமான அரசியல் வட்டாரங்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களுடன் இது குறித்துப் பேசிய போது நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றார்கள். பெரும்பாலும் அடுத்த வாரம் பாராளுமன்றம் கூட்டப்டலாம் எனவும், அதற்கான அறிவித்தலை ஜனாதிபதி வெளியிடுவார் எனவும் அவர்கள் உறுதியாகச் சொல்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் இருந்த நிலையில்தான் அது மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நான்கரை வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அதனைக் கலைத்தார். பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் எனவும், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்துக்குள் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாக வேண்டும்.

ஆனால், தற்போதுள்ள நிலையில் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. “பொதுத் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பதை கொரோனாதான் தீர்மானிக்க வேண்டும்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். தற்போதைய நிலையில் ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். அவ்வாறு கூட்ட வேண்டுமானால், ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால், கொரோ தொற்று பரவிவரும் நிலைமையைப் பார்க்கும் போது, அவ்வாறு தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை இப்போதைக்கு ஏற்படும் போல தெரியவில்லை.

ஏப்ரல் 20 க்குப் பின்னர் தேர்தல் குறித்த செயற்பாடுகளை ஆரம்பிக்காவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்ட திகதிகளைப் பின்பற்ற முடியாது என்பதுதான் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு. இது குறித்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு nறிவித்திருக்கின்றது. “பொதுத் தேர்தலை சட்ட விதிமுறைப்படி நடத்துவதாயின் இடைநிறுத்தப்பட்ட பொதுத் தேர்தல் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதியாவது மீள ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்குள் நாட்டில் இயல்பு நிலைமை வருமோ தெரியாது. வராமல் போனால் பொதுத் தேர்தலை மேலும் தள்ளிப்போடுவதற்கு உரிய சட்டத் திருத்தங்கள்கொண்டு வரவேண்டியிருக்கும்” என எழுத்து மூலமாக கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரசமைப்பு சட்ட ஏற்பாடுகளின் படி நாடாளுமன்றம் தேர்தல் ஆணைய எதிர்பார்ப்புப்படி தேர்தல் தொடர்பான சட்டங்களை மாற்றுவதாயின் அதற்கு நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும். அரசமைப்பில் திருத்தம் கொண்டு வருவதாயின் குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப் பெறவேண்டும். ஒத்தி வைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதற்கான சட்ட முயற்சி என்பதால் அதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்திழைப்புத் தரும் எனஎதிர்பார்க்க முடியும். எதிர்க்கட்சிகளும் இதற்கான கோரிக்கையை முன்வைத்திருப்பதால் அதில் பிரச்சினை இருக்காது என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனைவிட மற்றொரு பிரச்சினையும் அரசாங்கத்துக்கு இருக்கின்றது. நிதி ஒதுக்கீடு ஏப்ரல் இறுதிவரையில் மட்டும்தான் உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இப்போதைக்கு இல்லை. அதனால், நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டியது தவிர்க்கமுடியாததது.

இரண்டு விதங்களில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் உண்மையில் ஆகஸ்ட் வரையில் இருந்தது. ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை முன்னதாகவே கலைததார். அவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான வர்த்தமானியை ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொள்ள முடியும். அதன் மூலம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக இல்லாமல் அது செயற்பட முடியும் எனச் சுட்டிக்காட்டுகின்றார் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

அதற்கான வாய்ப்புக்கள் அதிகளவுக்கு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன. இன்று நடைபெறும் கட்சித் தலைவர்களுடைய கூட்டத்தில் இது குறித்து முக்கியமாக ஆரயப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *