ஊரடங்கு நேரத்தில் குடிமகன்கள் குடிக்க சிறப்பு பாஸ்!

              

கேரளாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், அங்குள்ள மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.
அடைக்கப்பட்டு ஒரு வாரம் தான் ஆன நிலையில், அதற்குள் மதுக்கடைகளுக்கும், குடிமகன்களுக்கும் ஊரடங்கால் உருவான சமூக இடைவெளியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சிலருக்குக் கை, கால்கள் நடுக்கம், மயக்கமும் வந்திருக்கின்றன. சிலரால் தூங்க முடியவில்லை. சிலருக்கு வலிப்பு  வந்திருக்கிறது. அதில் மூன்று பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இந்தப் பக்கவிளைவுகளைப் பார்த்த கேரள அரசு குடிப்பழக்கத்தை விட முடியாமல் தவிப்பவர்களுக்குச் சிறப்பு பாஸ் வழங்க நேற்று உத்திரவைப் பிறப்பித்திருக்கிறது.

இதன்படி, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், பாஸைப் பெற்று, வணிக வரித்துறையிடம் கொடுத்தால், அவர்களுக்கு மதுபானப் பாட்டில் அளவோடு வழங்கப்படும்.
ஆனால், கேரளாவில் உள்ள மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. ‘அரசே மது வழங்குவது என்பது மருத்துவர்களின் தார்மீக உரிமையை அவமதிப்பதாகும்’’ என்றிருக்கிறார் கேரள மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளரான டாக்டர் விஜயகிருஷ்ணன்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இதே மாதிரியான ‘மதுபானப் பிரியர்கள்’ சும்மா இருப்பார்களா? கேரள பாணியில் தங்களுக்கும் ‘பாஸ்’ கிடைக்காதா என்று எதிர்பார்க்க மாட்டார்களா?

இதைப் போலவே கர்நாடகாவிலும் சிலர் குடிக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
கொரோனா தொற்று அதிகமானோர் இருக்கும் கேரள  மாநிலத்தில் சிறப்பு பாஸ் வழங்கி, வழிகாட்டினால் அதுவே மற்ற மாநிலங்களுக்கும் உதாரணமாக மாறிப் போகலாம்.
சமூக இடைவெளியைக் குடிப்பவர்கள் விஷயத்திலும் கறாராகக் கடைப்பிடித்திருக்கலாம் கேரள அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *