கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது நடைமுறைக்கு வரும்?

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவல் (Community transmission) என்ற நிலையை அடைந்துவிட்டது என்கிறார் கொரோனா வைரஸ் குறித்த முனைவர் பட்டம் பெற்றுள்ள பவித்ரா வேங்கடகோபாலன்.

கொரோனா வைரஸ் குடும்பம் குறித்து ஆய்வு செய்து, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் பவித்ரா. சென்னையைச் சேர்ந்த பவித்ரா, கொரோனா வைரஸ் குறித்து உலகளவில் நடைபெறும் ஆராய்ச்சி தகவலைகளை கவனத்து வருபவர். பேட்டியிலிருந்து:

இந்தியாவில் 21 நாட்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிடுமா?

வைரசின் தாக்கம் முழுமையாக குறைந்துவிடும் என கூறமுடியாது. ஆனால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு இந்த 21 நாட்கள் நிச்சயம் உதவும் என்பது உண்மை. கொரோனா வைரஸை பொறுத்தவரை ஒரு நபரிடம் இருந்து குறைந்தது 2.2 நபர்களுக்கு பரவும். தடுப்பு மருந்துகள் தற்போதுவரை இல்லை. நோய் பரவலை கட்டுப்படுத்துவது மட்டும்தான் தற்போது சாத்தியம் என்பதால், பரவலை குறைக்க இந்த 21 நாட்கள் அவசியம்.

இதுவரை நமக்கு தெரிந்த பாதிக்கப்பட்டவர்களிடம் தென்படும் அறிகுறிகளைப் பார்த்தால், கொரோனா தொற்று வைரஸ் 14 நாட்கள் வரை ஒரு நபரின் உடலிலிருந்து மற்ற நபருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, அவர்கள் தொடர்பில் இருந்த 14 நாட்களுக்குப் பின்னர் தொற்று ஏற்படுவதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை.

அதனால்,முதல் 14 நாட்கள் தனித்திருப்பது முக்கியம். பாதுகாப்பு கருதி மேலும் ஒரு வாரம் தேவை என முடிவு செய்து, 21 நாட்கள் தனிமைப்படுத்தல் தேவை என அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற தனிமைப்படுத்தல் என்பது பரவலை பெருமளவு குறைக்கும்.

பவித்ரா வேங்கடகோபாலன்
Image captionபவித்ரா வேங்கடகோபாலன்

கொரோனா வைரஸ் முதலில் மூச்சுக்குழாயை தாக்கும் என்பதால் சூப் குடிக்கவேண்டும், வெதுவெதுப்பான தண்ணீர், கசாயங்கள் குடிக்கவேண்டும் உள்ளிட்ட பல விதமான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவுகின்றன. இது உண்மையா?

இதுவரை கோவிட்-19 தொற்றுக்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிதாக இதுபோல நோய்கள் வரும்போது, கூடவே பலர் இந்த நேரத்தில் பணம் ஈட்டப் பார்ப்பார்கள். லாபம் பார்க்க இதுபோல பரிந்துரைகளைச் செய்வார்கள்.

சூடான சூப், குடிநீர், இஞ்சி டீ குடிப்பதால் நீங்கள் ஓய்வாக உணரலாம். உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருந்தால், நோய் தொற்றால் உங்களுக்கு பாதிப்பு இருக்காது.

இதுபோன்ற மருத்துவ முறைகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. கைகளைக் கழுவுங்கள், தனித்து இருங்கள், கூட்டமாகக் கூடாதீர்கள் என்பாதைத்தான் நாம் ஆதாரபூர்வமாக சொல்லமுடியும்.

இந்த வைரஸ் விலங்குகளிலிருந்து வந்தாலும், ஏன் விலங்குகளுக்கு அதிகம் பரவவில்லை?

வௌவால் மூலமாக கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த விலங்கு மூலமாக மனிதனுக்கு பரவியது என்று தற்போதுவரை உறுதியாகவில்லை. மனிதர்களுக்கு நோய்த் தொற்று உள்ளது என்பதை அவர்கள் உடல்நலக்குறைவால் கண்டறிகிறோம்.

கொரோனா வைரஸ்

வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு தொற்று வந்தால் தெரியவரும். ஆனால் பிற விலங்குகளுக்கு வந்தால், அவற்றை யாரும் கண்காணிப்பதில்லை என்பதால் நமக்கு தெரியவில்லை. ஒருவேளை விலங்குகளுக்கு தாக்கம் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடு செல்லாதவர்கள், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பில் இல்லாதவர்கள் பத்து நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்துள்ளது. இது எப்படி சாத்தியம்?

சீனா அல்லது நோய் தொற்று ஏற்பட்ட பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள், ஏற்கனவே நோய் தொற்று இருந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரிடம் நோய் அறிகுறிகள் இருந்தன.

தற்போது இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட சமூக பரவல் (limited community transmission)தொடங்கிவிட்டது என்பதால், அதன் காரணமாக கூட கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். வைரஸ் தொற்று இல்லாதவர்களிடம் தொடர்பில் இல்லை என்றாலும், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமாகக் கூட பரவியிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *