நிர்பயா கொலையாளி நான்கு பேர்களின் கடைசி நிமிடங்கள்

நிர்பயா கொலையாளிகளின் கடைசி நிமிடங்கள்!
8 ஆண்டுகள் நீடித்த த்ரில்லர் தொடர்கதை இன்று அதிகாலை 5.30 மணிக்கு முடிந்துள்ளது.
டெல்லியில் மாணவி நிர்பயாவை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் நால்வருக்கும் இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று சூரிய உதயத்தைக் காணாமலேயே அஸ்தமனமான முகேஷ்குமார், பவன்குமார், வினய்குமார், அக்‌ஷய்குமார் ஆகிய நால்வரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தன.

சினிமாக் காட்சிகளை மிஞ்சும் வகையில் இரவுப் பொழுதில் நடந்த சம்பவங்களை ஜெயில் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
உயிர் பிழைப்பதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மாலை தாக்கல் செய்த இறுதி மனு, தங்களை எப்படியும் காப்பாற்றி விடும் என்று குருட்டு நம்பிக்கையில் இருந்தனர் நால்வரும்.

நள்ளிரவில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கொலையாளிகளைத் தூக்கிலிடத் தடை இல்லை என தீர்ப்பு அளித்தது.
கொஞ்ச நேரத்தில் இந்தத் தகவல் நால்வருக்கும் தெரிவிக்கப்பட்டது.
நிலைகுலைந்து போனார்கள். சில விநாடிகளில் சித்தப்பிரமை பிடித்தவர்கள் போல் நடந்துகொள்ள ஆரம்பித்தனர்.

ஜெயில் அதிகாரிகளைத் தரக்குறைவாக திட்டினர்.
தூங்கச் செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியும் யாரும் தூங்கவில்லை.

பொழுது புலரும் நேரத்தில் நால்வரும் இறுதி யாத்திரைக்குத் தயார் செய்யப்பட்டனர்.
“குளிக்கிறீர்களா?’’ என்று ஜெயில் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

“தேவை இல்லை’’ என நால்வரும் மறுத்து விட்டனர்.  ஒருவரைத்தவிர மற்ற மூவரும் சிற்றுண்டி அருந்தினர்.
சிறிது நேரத்தில் முகத்தில் கருப்புத் துணி போர்த்தி, அவர்கள் தூக்குமேடைக்கு பலத்தப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக அதிகாலை 4 மணிக்கே ‘கேங்க் மேன்’ (தூக்குக்காரர்) பவான் ஜால்லட் எழுந்து, காரியங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
ஜெயில் அதிகாரிகளுடன் கொஞ்ச நேரம் ஆலோசனை நடத்தி விட்டு, தூக்குமேடையை மீண்டும் சோதித்துப் பார்த்தார்.
தூக்கு மேடைக்கு கைதிகள் வந்ததும் அவர்கள் கழுத்தில் கயிறு மாட்டினார்.

சரியாக 5.30 மணிக்கு ஜெயில் அதிகாரி ‘தூக்கில் போடலாம்’ என கையை உயர்த்தி சமிக்ஞை கொடுத்ததும், தண்டனையை நிறைவேற்றினார் கேங்க்மேன்.
சிறை விதிமுறைகள்படி 30 நிமிடங்கள் அவர்கள் தூக்கிலேயே தொங்கினர்.
அதன்பிறகு டாக்டர் வந்து பரிசோதித்து, நால்வரும் உயிரிழந்ததை உறுதி செய்தபின் அவர்கள் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
நால்வரும் தூக்கில் போடப்படும் போது, ஜெயிலுக்கு வெளியே திரளாக மக்கள் கூடி இருந்தனர்.
நால்வரும் தூக்கில் போடப்பட்ட செய்தி அறிந்ததும், அவர்கள் ஆரவாரம் செய்தனர்.
அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி, ‘மரண நிகழ்வை’ கொண்டாடியுள்ளனர்.

சிறையில் கைதிகளுக்கு வேலை கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சிறையில் கூலி வேலைசெய்த வினய்க்கு 39 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
பவனுக்கு 29 ஆயிரமும், அக்‌ஷய்க்கு 69 ஆயிரமும் ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *