கொரோனாவுக்கு அடங்கியுள்ளன தமிழ் சினிமாத்துறை

தமிழ் சினிமாத்துறையின் அனைத்து அங்கங்களும் ஒரே நேரத்தில் முடங்கி கிடப்பது இதுவே முதல் முறை.
தொழிலாளர்கள் ஊதியப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களுக்காக கோடம்பாக்கத்தில் இதற்குமுன் வேலை நிறுத்தம் நடந்துள்ளது.

அப்போது சினிமா தியேட்டர்கள் திறந்திருந்தன.
வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாளோ இரு நாளோ தியேட்டர்கள் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில், சினிமா படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தன.

ஆனால், இப்போது கொரோனாவால் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன. எந்த ஷூட்டிங்கும் நடக்கவில்லை.
படப்பிடிப்புக்குப் பிந்தைய டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு, எடிட்டிங் உள்ளிட்ட வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதாவது சினிமா தொடர்பான எந்தப் பணியும் கடந்த செவ்வாய்கிழமை முதல் நடக்கவில்லை.
வரும் 31 ஆம் தேதி வரை இந்த ‘முழுஅடைப்பு’ நீடிக்கும் எனறு அரசு அறிவித்துள்ளது.

அதன் பிறகாவது, இயல்பு நிலை திரும்புமா என்பது திட்டவட்டமாக தெரியாததால், திக்குத்தெரியாத காட்டில் கண்ணைக்கட்டி விட்டது போல், திசை தெரியாது நிற்கிறது கோடம்பாக்கம்.
அண்ணாத்த, வலிமை, கோப்ரா, ஜனகனமன, அக்னிச் சிறகுகள் உள்ளிட்ட 10 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் சில படங்கள் வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், பாதியிலேயே ‘பேக்-அப்’ செய்து விட்டு திரும்பி விட்டார்கள்.

இதற்கு மத்திய அரசின் எச்சரிக்கையே காரணம்.
உயிர்க்கொல்லி நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வேறுவழி இல்லை என்ற சூழலில், அரசு எடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியே இது.

கடந்த திங்கள்கிழமை மாநில எல்லைகளில் உள்ள தியேட்டர்கள் முதலில் அடைக்கப்பட்டன. மறுநாள் தமிழ்நாடு முழுக்க தியேட்டர்கள் மூடப்பட்டன.
திரையரங்குகள் மூடுவிழா காண்பதற்கு நான்கு  நாள் முன்பு தான் (வெள்ளிக்கிழமை) வால்டர், தாராளபிரபு, அசுரகுரு ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன.

இந்தப் படங்கள் குறித்த காற்றுவழி விமர்சனங்கள் பொதுமக்களை எட்டிக்கொண்டிருந்த அதே நேரத்தில் தியேட்டர்கள் மூடப்படும் செய்தியும் அவர்களை எட்டின.
கோடிக்கணக்கில் முதலீடு செய்து உருவாக்கப்பட்ட மூன்று படங்கள் நான்கு நாள் மட்டுமே, திரையைப் பார்த்துள்ள நிலையில், தியேட்டர்கள் மீண்டும் திறக்கும்போது அந்த படங்களைத் திரும்பவும் வெளியிடும் திட்டத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

நடைமுறையில் அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
இந்த மூன்று படங்களுக்கு பிறகு அடுத்த இரு வெள்ளிக் கிழமைகளில் (மார்ச் 20, 27) காக்டெய்ல் உள்ளிட்ட  மேலும் ஏழு படங்கள் ரிலீஸ் ஆக இருந்தன.

31 ஆம் தேதி வரை தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் அவற்றின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்  மொத்தம் 960 தியேட்டர்கள் உள்ளன.
தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு என்றால் கூட, 15 நாள் இழப்பு (31 ஆம் தேதி வரை) 150 கோடி ரூபாய்.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள நிலையில், 15 நாட்கள் தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.

இந்த 15 நாட்களில் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால், அதன் தயாரிப்பாளர்கள் கொஞ்சமாவது லாபம் பார்த்திருப்பார்கள். அதுவும் போயிற்று.
31 ஆம் தேதிக்குப் பிறகு ரிலீஸ் செய்வதற்காக மேற்சொன்ன சின்ன பட்ஜெட் படங்கள் தவிர வேறு சில படங்களும் வரிசையில் நிற்கின்றன.
31 ஆம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டால், நான்கு நாள் மட்டுமே ஓடிய நான்கு படங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் ஆகாத 8 படங்கள் ஆகியவற்றுடன் மேலும் சில புதுப்படங்களும் கோதாவில் நிற்கும்.

தியேட்டர் உரிமையாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
எந்தத் திரைப்படத்தை வெளியிடுவார்கள்?
ஏற்கனவே ரிலீஸ் ஆன அந்த மூன்று படங்களையா?
நாள் குறிக்கப்பட்டு வெளியாகாத 8 படங்களையா?

அல்லது மேற்சொன்ன படங்களின் ரிலீசுக்கு பிறகு வெளியிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு ‘கியூ’வில் நிற்கும் படங்களையா?
தயாரிப்பாளர்கள் ஏதாவது ‘ரேஷன்’ முறையை அமல்படுத்தினால் மட்டுமே சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் மூச்சுவிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *