கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரானில் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 141 நாடுகளில் பரவி உள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5,700 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 1,52,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் 2-வது இடத்தில் உள்ளது.

அங்கு கடந்த மாதம் 19ஆம் திகதி மத்திய மாகாணமான குவாமில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அந்த மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும், ஈரான் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது.

ஈரானில் கொரோனாவால் இதுவரை 724 பேர் பலியான நிலையில், நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி, துணை அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார தடை, விலைவாசி உயர்வு என பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் ஈரானுக்கு கொரோனா வைரஸ் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் நாடாளுமன்றத்துக்கான 2ஆம் கட்ட தேர்தலை அந்த நாட்டு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

290 உறுப்பினர்களை கொண்ட ஈரான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.

2016-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற இந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகின.

5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வாக்களிக்கும் தகுதி இருந்தபோதிலும், பாதிக்கும் குறைவாக அதாவது சுமார் 2 கோடியே 40 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இது கடந்த 2016-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவாகும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலே வாக்குப்பதிவு சரிவுக்கு காரணம் என தகவல்கள் பரவின.

இந்த சூழலில்தான் அடுத்த மாதம் (ஏப்ரல்) 17 ஆம் திகதி நடக்க இருந்த 2ஆம் கட்ட தேர்தலை செப்டம்பர் 11ஆம் திகதிக்கு ஈரான் ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *