தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரன்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய அரசியலமைப்புப் பற்றிய விவாதங்கள் பல இடங்களிலும் அமர்க்களமாக நடந்தன. ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்குள்ளிருக்கும் அபாயத்தைப்பற்றிய கடுமையான – சர்ச்சைக்குரிய விவாதங்கள் அவை. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களே தடுமாறும் அளவுக்கு அந்த விவகாரம் அதிக சங்கடத்தைக் கொடுத்திருந்தது. ஏனென்றால் அந்த அரசியலமைப்பு விவகாரம் நிறைவேற்றப்படாத ஒரு சரக்கு என்பதை மறைப்பதற்கு இட்டுக்கட்டப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உண்மைபோலாக்குவதற்காக ஒரு சீரியஸ் தன்மையைக் கூட்டமைப்பு உருவாக்கியிருந்தது.

இதற்காக நடந்த விவாதங்களில் சுமந்திரன் கலந்து கொண்டு கடினமான கேள்விகளுக்கெல்லாம் பதலளித்தார். சுமந்திரனுடைய அந்தப் பதில்கள் பலருக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. அதிகம் ஏன், அவருடைய தமிழரசுக் கட்சியினருக்கே திருப்தியளிக்கவில்லை. எதிர்த்தரப்புகள் வேறு கடுமையாகச் சாடிக் கொண்டிருந்தன. இருந்தாலும் சுமந்திரனின் பதில்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. அந்தப் பதில்களையொட்டி மேலும் மேலும் விவாதங்கள் நடந்தன. இதன் மூலம் எதற்கும் தான் தயாராக இருக்கும் ஒருவர். எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளக் கூடிய திராணி உள்ளவர் என்பதைச் சுமந்திரன் நிரூபித்தார். இதைச் சரியாகச் சொன்னால், இதன் மூலம் தன்னை ஒரு வலுமிக்க சக்தியாகக் கட்டியெழுப்பினார் சுமந்திரன்.

இதற்கடுத்ததாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆட்சிக்காலத்தில் கடைப்பிடித்த அரச சார்புப் போக்கையொட்டி எழுந்த சர்ச்சைகள், விவாதங்களிலும் சுமந்திரனே முன்னின்று பதிலளித்தார். கூட்டமைப்பிலுள்ள மற்றவர்கள் என்ன பதிலைச் சொல்வது? அதை எப்படிச் சொல்வது? மக்களிடம் எப்படி முகம் கொடுப்பது? என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

அதனால் பொது வெளியில் அவர்கள் தலைகாட்டுவதோ குரலை உயர்த்துவதோ இல்லை. இவ்வாறிருந்த நெருக்கடிச் சூழலில் தனியொருவராக நின்று ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதலளித்து வந்தார் சுமந்திரன். இதற்காக அவர் சில தொலைக்காட்சி விவாதங்களைத் தானே செற்றப்பண்ணி உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் தனக்குக் கடுமையான எதிர்ப்பிருக்கிறது என்று தெரிந்து கொண்டே அங்கே சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். அங்கங்கே எதிர்ப்புகளையும் நேரில் சந்தித்திருக்கிறார்.

இப்படித் தன்னையும் தன்னுடைய கட்சியையும் சுற்றி வளைத்திருக்கும் எதிர்ப்புகளின் மத்தியில் தனித்து நின்று கம்பு சுற்றும் கில்லாடியாக சுமந்திரனே செயற்பட்டு வந்திருக்கிறார். அப்படிச் செயற்பட்டே கூட்டமைப்பின் மீதான கோபங்களையெல்லாம் அவர் வடிய வைத்தார். கூட்டமைப்பின் உட்கொதிப்புகளை ஆற்றினார். கூட்டமைப்புக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் தணித்து வந்தார். மறுவளத்தில் கொழும்போடும் பிற வெளிச்சக்திகளோடும் உறவாடி கூட்டமைப்பைக் கொழுக்கவும் வைத்தார். (இதனால்தான் கூட்டமைப்பின் பங்காளிகளும் தமிழரசுக் கட்சியினரும் சுமந்திரனுக்கு எதிராக வாயைத் திறக்க முடியாதிருக்கின்றனர்).

ஏறக்குறைய இப்பொழுதும் அப்படியான ஒரு உத்தியைத்தான் சுமந்திரன் கையாள்கிறார். இது தேர்தலை எதிர்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கும் உபாயம். அதாவது அண்மைக்காலத்தில் கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பிறக்கத்தைச் சீராக்கி, வெற்றிவாய்ப்பைக் கூட்டுவதற்காக மக்களையும் அதிருப்தியாளரையும் கையாள முற்பட்டிருக்கும் உத்தி இது. இதன் அடையாளமே தற்போது கூட்டமைப்பு ஆரம்பித்துள்ள அரசியற் கருத்தரங்குகள். இதில் எவரும் எத்தகைய கேள்விகளையும் கேட்கலாம். எவரும் எப்படியும் தம்மை விமர்சிக்கலாம் என்று களத்தைத் திறந்து விட்டிருக்கிறார் சுமந்திரன்.

மாவை சேனாதிராஜா போன்ற மூத்த தலைவர்களே மக்கள் அரங்குகளிலும் ஊடக வெளியிலும் பதலிக்கத் தயங்கித் தடுமாறிக் கொண்டிருக்கும்போது சுமந்திரன் மிகச் சாதாரணமாக எல்லோருடைய கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு பதிலளித்துக் கொண்டிருக்கிறார். இதை அவர் நேருக்கு நேர் மக்கள் முன்னிலையில் செய்கிறார். இதன் மூலம் தன்னைக் கூட்டமைப்பிலும் சமூக வெளியிலும் வலுவான ஒரு சக்தியாகத் திரட்டிக் கொள்கிறார். ஒரு கெட்டியான அடையாளமாக்கித் திரள்கிறார்.

சுமந்திரனின் இத்தகைய செயலூக்கத்தினால் கூட்டமைப்பிற்குள் அவர் இன்று மேலெழுந்திருக்கும் ஒரு வலுவான சக்தி. ஏற்கனவே கூறப்பட்டதைப்போல கடினமான நிலைமைகளிலும் கடினமான கேள்விகளின் முன்னும் நிமிர்ந்து நிற்கத் தயங்குமிடத்தில் தன்னை நிறுத்திக் கொள்வதன் மூலமாக மற்றவர்களையும் விட உயர்ந்து விட்டார் சுமந்திரன். இதனால் எதையும் எவரையும் தீர்மானிக்கும் சக்தி என்ற நிலையை அடைந்திருக்கிறார்.

சுமந்திரனுடைய அரசியற் பிரவேசக் காலம் பத்தாண்டுகளாக இருந்தாலும் கூட்டமைப்பிற்குள்ளும் அரசியல் பொது வெளியிலும் அவர் ஒரு மூத்த தலைவரின் இடத்துக்குச் சமனாக மாறிவிட்டார். ஏன் ஆயிரமாயிரம் எதிர்விமர்சனங்கள் இருக்கின்ற போதும் தமிழ்ச்சமூகத்திலும் சுமந்திரன் மிக அறியப்பட்ட – தவிர்க்கவே முடியாத ஒருவர் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்.

இதற்கு அவரிடமிருக்கும் உறுதியும் துணிச்சலாகப் பேசும் தன்மையும் உதவியிருக்கின்றன. முக்கியமாக ஐ.தே.க அரசாங்கத்தை ஆதரிக்கும்போது அதற்கான நியாயங்களைத் தயக்கமில்லாமல் – தடுமாற்றங்களில்லாமல் சொன்னார். மகிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன தரப்பின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். அதைப்போல முஸ்லிம் மக்கள் புலிகளால் வடக்கிலிருந்து விரட்டப்பட்டது தவறு என்றார். புலிகள் ஏனைய இயக்கங்களை அடக்கி ஒடுக்கியே தம்மை அரசியல் ரீதியாகக் கட்டியெழுப்பினார்கள் என்றார். புலிகளின் அரசியலை கடுமையாக விமர்சித்தார். அப்படி விமர்சித்துக் கொண்டே இன்று தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கிறேன் என அடையாளப்படுத்த முற்படுகிறார்.

அதாவது இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் அரசியலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. அது வேறு. இது வேறு. ஆகவே இதையிட்டு சிங்கள மக்களோ அரசாங்கமோ குழப்படையத்தேவையில்லை என்ற மாதிரியான ஒரு தோற்றத்தைக் காண்பிக்க முற்படுகிறார். இதைத்தான் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்மந்தனும் செய்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் புலி நீக்கம் செய்யப்பட்ட கூட்டமைப்பே இப்போதுள்ளது என்று காண்பிக்கப் பாடுபடுகிறார். (இதை எப்படித்தான் சிறிதரன் போன்ற புலிகளைப் போற்றி அரசியல் செய்வோர் ஜீரணிக்கப்போகிறார்களோ!)

ஆகவே இவ்வாறான ஒரு பின்னணியிலேயே வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தலையும் சுமந்திரன் செய்து கொண்டிருக்கிறார்.

வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு வழமையை விட எதிர்நிலை அம்சங்கள் கூடுதலாகக் காணப்படுகின்றன. கூட்டமைப்பின் கடந்த காலம் என்பது அதனுடைய நிகழ்காலத்தை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. எதிர்காலத்தைக் கேள்வியின் முன்னே நிறுத்தியிருக்கிறது. மக்களுக்கு நம்பிக்கையளிக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமை, அதற்கான செயற்றிறனின்மை, மக்களுடனான உறவில் ஏற்பட்ட இடைவெளி, கூட்டமைப்பினுள்ளே ஏற்பட்ட அரசியற் குழப்பங்கள், அதனுடைய உடைவு, ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட அரச ஆதரவு, சமூகப் பிரச்சினைகள் எதிலும் சம்மந்தப்படாமல், அவற்றுக்குத்தீர்வு காணாமல் விலகி நின்றமை, மக்களுடைய வாழ்க்கையைக் குறித்துக் கவனம் கொள்ளாமை, மக்கள் முன்னெடுத்த போராட்டங்களில் கூட விசுவாசமாகப் பங்கேற்காமை, தலைமைப் பொறுப்பிலிருப்போர் மக்களுக்கு வெகு தொலைவுக்குச் சென்றமை எனப் பலவற்றினால் ஆனது. இதையே எதிர்த்தரப்புகள் வாய்ப்பாகப் பயன்படுத்த விளைகின்றன.

இந்த நிலையில்தான் சுமந்திரன் ஒரு புதிய உத்தியாக இந்த உரையாடற் களத்தைத் திறந்து சமகால அரசியல் விளக்கங்களை அளித்து வருகிறார். அதாவது கூட்டமைப்புக்கான தேர்தற் பரப்புரைக்களம் திறக்கப்பட்டாயிற்று. அதைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் சுமந்திரன். இதன் மூலம் ஊடகப் பெருவெளியிலும் சனங்களின் உரையாடற் பரப்பிலும் கூட்டமைப்பையும் தன்னையும் மையமாக்கியிருக்கிறார் அவர்.

வெளித்தோற்றத்தில் சுமந்திரன் மக்களுடைய – ஊடகத்துறையினருடைய – கேள்விகளால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பது போலத் தோன்றும். வசமாக மாட்டிக்கொண்டு திக்குமுக்காடுகிறார் என்று கருதக் கூடியதாக இருக்கும். ஆனால் கூர்ந்து நோக்கினால் இவையெல்லாவற்றுக்கும் மிகச் சாமர்த்தியமாகப் பதலளித்துக் கொண்டு, அல்லது கேள்வி கேட்போரினதும் அந்தக் கேள்விக்கு ஆதரவாக இருப்போரினதும் கொதிப்பை ஆற விட்டு விட்டு நகர்ந்து விடுகிறார் அவர்.

இது அவருக்குக் கிடைத்திருக்கும் பெரு வெற்றியாகும். இதுவே அவருடைய நோக்கமும் இலக்கும். இறுதி விளைவாக இதற்குப் பிறகு கூட்டமைப்பை ஆதரிக்கக் கூடிய மன நிலை மக்களிடம் உருவாக்கப்பட்டு விடும். எப்படியென்றால், இந்த விவாதங்களைப் பார்ப்பதற்கான ஆவலைத் தூண்டி, மக்களைத் தம்மை நோக்கி வர வைப்பது, மக்களைத் தம்மை நோக்கிக் கவனிக்க வைப்பது. மக்களுடைய மனதில் உள்ள கேள்விகளை இன்னொருவரைக் கொண்டு கேட்க வைத்து அதற்கான பதிலைச் சொல்லி கோபத்தை இல்லாமலாக்குவது என்பதே இந்த உத்தியாகும். அப்படிக் கவனிக்கும் மக்களின் மனதில் கூட்டமைப்போடு ஒரு இடையறாத நெருக்கத்தையும் உறவையும் உருவாக்கி விடுவது. அது உருவாகி விடும். எதிர்மறையாகப் பேசினாலும் அது நேர்மறைக்கான அறிமுகத்தையும் தொடர்பாடலையுமே தரும்.

எனவே ஏனைய தமிழ் அரசியற் கட்சிகளையும் விட இன்று மிகத் துரிதமாக தேர்தற் களத்தில் நிற்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. அதுவே அதிகமாகப் பேசப்படும் கட்சியாகவும் உள்ளது. ஒரு பக்கத்தில் இந்த மாதிரி அரசியற் கருத்தாடல்களின் வழியாக. மறுபக்கத்தில் வேட்பாளர் பட்டியலைப்பற்றிக் கசிய விடப்படும் செய்திகளால். இதுவும் ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கையே. தேர்தல் அரசியலில் தேர்ந்த கட்சி என்ற வகையில் அதற்கான சாமர்த்தியங்கள், நுட்பங்கள், தந்திரங்களோடு கூட்டமைப்பு செயற்படுகிறது. இதற்கு நிகராக இதுவரையில் பிற கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ளவில்லை என்பது துயரமே.

கூட்டமைப்பின் மீது விமர்சனங்களைக் கொண்டிருக்கும் தரப்புகளோ இன்னும் இதில் ஒரு புள்ளியைக் கூடத் தொடவில்லை. அவற்றில் அனுபவமுள்ள தலைவர்கள் இருக்கின்ற போதும் அவர்களால் விரைந்து செயற்பட முடியவில்லை. அதற்கான செயற்றிறன் அவர்களிடமில்லையா? அல்லது அரசியற் தெளிவீனத்தின் அடியிற் சிக்குண்டிருக்கின்றனரா? அல்லது வேறு ஏதானும் காரணங்கள் உண்டா? என்று தெரியவில்லை.

ஆனால், காலம் அவர்களுக்கும் கனிந்திருக்கிறது. அதைக் கையாளத் தெரியாமல் பலரும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். புதிய தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தோருக்கு தங்களின் அரசியலை எப்படி முன்னெடுத்துச் செல்வதெனத் தெரியவேயில்லை.

உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் அதன் பங்காளிக் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் பகிரங்க மேடைக்கு அழைக்க வேண்டிய பொறுப்பிலிருக்கின்றன விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜி லிங்கம் – சிறிகாந்தா, அனந்தி, ஐங்கரநேசன் அணிகள். இருந்தும் அவற்றின் தயக்கம் நிறைந்த மௌனம் கூட்டமைப்பைப் பாதுகாத்து மேலும் உயர்த்திக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இதைப்போலத்தான் உள்ளது ஈ.பி.டி.பி, ச ம த்துவக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடதுசாரியக் கட்சிகள் அனைத்தும்.

ஆம், இன்றைய நாயகனாகச் சுமந்திரனே நிற்கிறார். என்ன செய்வது, திரைகடலோடிப் பயிற்சி எடுத்தோரும் அரசியல் செய்தோரும் செய்வதென்ன என்றறியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *