கொரோனா அச்சத்தில் கனேடிய பாராளுமன்றம் ஒத்திவைப்பு

கொரோனோ தொற்று பரவல் அச்சுறுத்தல் மற்றும் சுய கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கனேடிய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஏப்ரல் 20-ஆம் திகதிவரை 5 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கனடா மத்திய அமைச்சரவை நேற்று வெள்ளிக்கிழமை பிரதமா் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையில் ஊடக நேரலை தொடா்பாடல் மூலம் ஒன்றுகூடியது.

இதன்போதே நாடாளுமன்றத்தை ஏப்ரல்-20 வரை ஒத்திவைக்க தீா்மானம் எடுக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை ஏகமனமாக அங்கீகாரம் அளித்தது.

ஏப்ரல் 20-க்கு பின்னரும் நாடாளுமன்றை ஒத்திவைக்கவோ, அல்லது தேவை ஏற்படின் ஏப்ரல்-20 முன்னரோ நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சபையை இடைநிறுத்திய பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அரசாங்க மன்றத் தலைவர் பப்லோ ரோட்ரிக்ஸ் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இது கொரோனா வைரஸ் தொற்றுநோயை மத்திய அரசு எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதற்கான அறிகுறியாகும் என்றும் அவா் கூறினார்.

அரசாங்கத்தினதும் இந்த சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களதும் முன்னுரிமை அனைத்து கனேடியர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்புமே என ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.

கன்சர்வேடிவ், பிளாக் கியூபெக்கோயிஸ் மற்றும் புதிய ஜனநாயக கட்சிகளின் எம்.பி.க்கள் அவரது இந்தக் கூற்றை ஏற்று ஆமோதித்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *