இத்தாலியில் கொரோனா அச்சத்தில் 1.6 கோடி மக்கள் பாதிப்புள்ளாகும் அறிகுறி!

சீனாவை தாண்டி உலக நாடுகளை மிரட்டிவரும் கொரோனா வைரஸின் பாதிப்பின் உச்சமாக வடக்கு இத்தாலியில் 1.6 கோடி மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தில் மட்டுமின்றி அந்நாட்டின் 14 மாகாணங்களில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்கும் என்று கருதப்படுகிறது.

இத்தாலி எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மற்றொரு பகுதியாக இத்தாலி முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கேளிக்கை சேவைகள் ஒட்டுமொத்தமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய கண்டத்திலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் இத்தாலியில் இதுவரை இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோவிட்-19 தொற்றால் நேற்று மட்டும் புதிதாக 1,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 5,883 ஆக உயர்ந்துள்ளது.

10 மில்லியன் மக்கள் வசிக்கும் லோம்பார்டி பிராந்தியத்தில் இத்தாலியின் நிதி மையமான மிலன் உள்ளிட்ட நகரங்களும் அடக்கம். இந்த பிராந்தியத்தோடு, மேலும் வெனிஸ், பர்மா மற்றும் மொடெனா உள்ளிட்ட 14 மாகாணங்களும் தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் மொத்தம் 16 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் பிரதமர் கியூசெப் கோண்டே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இத்தாலியில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இத்தாலியில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *