மனைவி பேட்ஸ்மேன் கணவர் பந்துவீச்சாளர் அசத்தும் தம்பதியினர்

மனைவி பேட்ஸ்மேன், கணவர் பந்துவீச்சாளர்!
ஆஸ்திரேலியாவின் கிரிக்கட் அணி தம்பதி
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான இவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
இவர் மட்டும் ரன்மழை பொழிந்துவிட்டால், ஆஸ்திரேலிய அணி இந்தியாவை புரட்டி எடுத்துவிடும் என்பதால், இந்திய வீராங்கனைகள் இவரது விக்கெட்டை கைப்பற்றுவது எப்படி என்று மண்டையை போட்டு உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி இந்திய வீராங்கனைகளுக்கு சவால் விடும் அலிஸா ஹீலி வேறு யாருமல்ல, ஆண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்து விச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவிதான்.
கிரிக்கெட் உலகின் நம்பர் ஒன் தம்பதியாக கருதப்படும் அவர்களின் பெயர்களை இணைத்து ‘ஸ்டீலி’ என்று செல்லமாக அழைக்கிறார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு முன்பே, அதாவது ஸ்டார்க்கின் 9-வது வயதிலேயே அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார் அலிஸா ஹீலி.
பிரபல ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான இயான் ஹீலியின் மருமகள்தான் அலிஸா ஹீலி.
தன் மாமாவைப் பின்பற்றி தானும் விக்கெட் கீப்பராக விரும்பிய அலிஸா, சிட்னி வடக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இணைய, அங்கேதான் ஸ்டார்க்கை முதல் முறையாக சந்தித்துள்ளார்.
இப்போது வேகப்பந்து வீச்சாளராக உள்ள ஸ்டார்க், அப்போது சிட்னி வடக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் விக்கெட் கீப்பராக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இருவரும் ஒரே துறையில் இருக்க, அதுபற்றி அடிக்கடி விவாதிக்க, காதல் தீ சிறு வயதிலேயே பற்றிக்கொண்டுள்ளது.
பிற்காலத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியில் விக்கெட் கீப்பராக அலிஸா இணைய, வேகப்பந்து வீச்சாளராக மாறி ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
இருவரின் பாதை மாறினாலும், காதல் மாறவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டில் அலிஸாவை மணமுடித்துள்ளார் ஸ்டார்க்.
இருவரும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதால், இந்த தம்பதி ஒன்றாக இருக்கும் நேரம் மிகவும் குறைவு.
அலிஸா கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் நேரத்தில் ஸ்டார்க் வீட்டிலும், அலிஸா வீட்டில் இருக்கும் நேரங்களில் ஸ்டார்க் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதிலும் பிஸியாக இருப்பதால் இவர்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு.
இருப்பினும் இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், மிகுந்த புரிதலுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் மனைவி ஆடுவதைப் பார்க்க, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடுவதைக்கூட தவிர்த்து மெல்பர்ன் நகருக்கு வந்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
கணவர் கண்முன் மனைவி அதிரடியாக ஆடி கோப்பையை வெல்வாரா? அல்லது இந்திய அணி இந்த ஜோடியின் கனவை சிதைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *