நான் முதலமைச்சர் ஆக மாட்டேன் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி

“நான் முதலமைச்சர் ஆக மாட்டேன்’’
ரசிகர்களை அலற விட்ட ரஜினிகாந்த்
மக்கள் எதிர் பார்க்கிறார்களோ இல்லையோ, ரஜினியின் ரசிகர்களைப் போல் அரசியல் கட்சிகளும் அவரது அரசியல் பயணத்தை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருப்பது உண்மை.
‘தலைவர் அரசியலுக்கு வருவாரா?’ என அவரது ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து, தங்கள் கனவின் ‘வெள்ளிவிழா’ ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
2 ஆண்டுகளுக்கு முன்பே “நான் அரசியலுக்கு வருவது உறுதி’’ என்று அறிவித்த ரஜினி, ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக்கினார்.
“மன்றத்துக்கு நிறைய உறுப்பினர்களைச் சேருங்கள்.. தேர்தல் பூத் கமிட்டிகளை அமையுங்கள்’’ என்று ஆணையிட்டார்.
அவை நடந்து வருகிறது.
இந்தநிலையில் சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்று கூட்டி இருந்தார், ரஜினி.
மொத்தம் 38 மாவட்ட செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மூத்த மாவட்ட செயலாளர்கள் சிலர், தங்கள் கருத்தைத் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பெரும்பாலானோர் “தனித்தே நமது கட்சி போட்டியிட வேண்டும்’’ என்று கூற, ஒரு சிலர் “கூட்டணி இருந்தால் வெற்றி வாய்ப்பு சுலபமாக இருக்கும்’’ என்று தயங்கி தயங்கி கருத்து தெரிவித்துள்ளனர்.
இறுதியாக உரை நிகழ்த்த ஆரம்பித்த ரஜினிகாந்த், “கூட்டணி குறித்துத் தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’’ என்று கூறி விட்டு, சில அதிர்ச்சி வைத்தியங்களை அளித்துள்ளார்.

என்ன பேசினார்?

கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களை யாரிடமும் சொல்லக்கூடாது என்று ரஜினி உத்தரவிட்டிருந்தாலும், ஊடகங்களிடம் சில செயலாளர்கள் ரஜினி பேசியதை “ஆஃப் தி ரிகார்ட்’’ ஆக தெரிவித்துள்ளனர்.

ரஜினி பேசியது இதுதான்:

“25 ஆண்டுகளாக நான் கட்சி தொடங்க வேண்டும் என்று கூறி வந்தீர்கள். நானும் கட்சி தொடங்கப்போவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டேன்.
கட்சி ஆரம்பிக்க முடிவெடுத்துள்ள நான், பல பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைத்தேன். ஆனால் பல மாவட்ட செயலாளர்களின் செயல்கள், பணிகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.
குறைந்தபட்சம் 65 ஆயிரம் வாக்குச்சாவடி பூத்துகளை அமைக்குமாறு கூறினேன். 55 ஆயிரம் பூத்துகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
உறுப்பினர் சேர்க்கையும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. விரைவில் நான் ஆரம்பிக்கப்போகும் கட்சியை நானே வழி நடத்துவேன்.
ஆனால் நான் முதல்மைச்சர் வேட்பாளராக இருக்க மாட்டேன். கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன். வேறு யாராவது ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
அ.தி.மு.க., தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளில் இருந்து நமது கட்சியில் முக்கிய பிரமுகர்கள் சேரவிருக்கிறார்கள். அவர்களுக்கு நமது இயக்கத்தில் பொறுப்புகள் கொடுக்கப்படும்.
கட்சி ஆரம்பித்தபின் இப்போதுள்ள மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் சிலர் மாற்றப்படுவார்கள். ஆம்.. உங்களில் சிலர் இந்தப் பொறுப்பில் இருக்க முடியாது.
இப்போது உள்ள மன்றம் அப்படியே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. புதிதாக ஆரம்பிக்கப்போகும் அரசியல் கட்சி தனித்து இயங்கும்.
இங்கு நாம் பேசிய விஷயங்களை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது. உங்கள் வாழ்க்கை துணைவிடம் கூட சொல்லக்கூடாது.’’ என்று முடித்துவிட்டு போயஸ்கார்டன் புறப்பட்டுச் சென்றார்.
வீட்டுவாசலில் பேட்டி அளித்த ரஜினி, “இன்றையக் கூட்டத்தில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டன. ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம். அதனை நேரம் வரும்போது சொல்கிறேன்’’ என்று பூடகமாக சொல்லி விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

என்ன ஏமாற்றம்?

“தலைவரோடு நடந்த உரையாடல் வெளிப்படையாகவே நடந்தது. ஏமாற்றம் என்று அவர் ஏன் சொன்னார் என்பது தெரியவில்லையே” என்றார் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு செயலாளர்.
மன்ற நிர்வாகிகள் சிலர் கோஷ்டி அரசியல் செய்வதாக, ரஜினி கவனத்துக்கு வந்துள்ளது.
அதனை மனதில் வைத்தே “ஏமாற்றம் அளிக்கிறது’’ என்ற வார்த்தையை ரஜினி பிரயோகம் செய்ததாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *