நடுத்தர வயதில் வருகிற புற்றுநோயை எவ்வாறு கண்டறிவது

ஒரு டாக்டரின் பதிவு

கோர்க் வடநாட்டுப் பையன். வயது 30. நூற்பாலை வேலைக்காக ராஜபாளையம் வந்திருந்தான். அவனுக்குப் பான் மசாலா சுவைக்கும் பழக்கம் இருந்தது. என்னிடம் சிகிச்சைக்கு வரும்போதெல்லாம் அவனைக் கண்டிப்பேன். ஆனால், அவன் திருந்தவில்லை… அவன் ஒருமுறை ‘பசியே இல்லை’ என்று வந்தான். அவனுக்கு எண்டோஸ்கோப்பி எடுத்துப் பார்க்க வேண்டும் என்றேன். ‘சொந்த ஊருக்குச் செல்லும்போது பார்த்துக் கொள்கிறேன். இப்போதைக்குப் பசி எடுப்பதற்கு டானிக் எழுதிக் கொடுங்கள்’ என்றான். அப்போதுகூட ‘பான் மசாலா பழக்கத்தை விட்டொழித்தால்தான் உனக்குப் பசி எடுக்கும்’ என்றேன்.

3 மாதங்கள் கழித்து மீண்டும் வந்தான் கோர்க். இப்போது ‘உணவை விழுங்கினால் ஏதோ தடுப்பதுபோல் இருக்கிறது. உடல் மெலிகிறது’ என்றான். அவனிடம் நான் எதிர்பார்த்த ஆபத்து நெருங்கி விட்டதாகப்பட்டது. அப்போதும் அவனுக்கு ‘எண்டோஸ்கோப்பி எடுத்துப் பார்ப்பது அவசியம்’ என்றேன். அவனுக்கு அதன் முக்கியத்துவம் புரியவில்லை. ‘அல்சருக்கு மருந்து கொடுங்கள். சரியாகிவிடும்’ என்று அவனாகவே சமாதானப்படுத்திக் கொண்டான். சில மாதங்கள் கழித்து கோர்க் வேலை பார்த்த நூற்பாலை மேனேஜரை ஒரு திருமண நிகழ்வில் சந்தித்தேன். அப்போது அவரே கோர்க்கை நினைவுபடுத்தினார். ‘கோர்க் இப்போது அவன் சொந்த ஊரில் சிகிச்சையில் இருக்கிறான். நீங்கள் எச்சரித்ததுபோல் உணவுக்குழாயில் கேன்சர் உள்ளதாக எண்டோஸ்கோப்பியில் தெரிந்துள்ளது. ரேடியோதெரபியும் கீமோதெரபியும் கொடுக்கிறார்கள். ‘ஸ்டென்ட்’ வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்’ என்றார்.

‘மிக எளிதாகத் தடுத்திருக்க வேண்டிய புற்றுநோய் இது. எத்தனை சொல்லியும் கோர்க் கேட்கவில்லை. அவனிடம் இருந்த பான் மசாலா பழக்கம்தான் அவனுக்கு வினையாகிவிட்டது. இந்த சின்ன வயதிலேயே புற்றுநோய் வந்துவிட்டது’ என்றேன். கோர்க் ஒரு சிறிய உதாரணம்தான். கோர்க்கைப்போல இன்னும் ஆயிரக்கணக்கான பேர் ‘பான்’ போடும் பழக்கத்தைக் கைவிட முடியாமல் வாய், கன்னம், நாக்கு, தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை ஆகிய இடங்களில் புற்றுநோய் வந்து அவதிப்படுகின்றனர். நம் நாட்டைப் பொறுத்தவரை நடுத்தர வயதில் வருகிற புற்றுநோய்களில் உணவுக்குழாய் புற்றுநோய்தான்(Cancer oeophagus) முதலிடம் வகிக்கிறது.

இது எங்கெல்லாம் வரும்?

கழுத்துப்பகுதியில் உள்ள உணவுக்குழாயில் 8%. நெஞ்சின் மேல்பகுதி உணவுக்குழாயில் 3%. உணவுக்குழாயின் நடுப்பகுதியில் 32%. கீழ்நெஞ்சுப்பகுதியில் 25%. உணவுக்குழாயும் இரைப்பையும் இணைகிற இடத்தில் 32%. இந்தியர்களுக்கு உணவுக்குழாயின் நடுப்பகுதியில்தான் இந்தப் புற்று அதிக அளவில் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

ஒரு முக்கோணத்துக்கு மூன்று கோணங்கள் முக்கியம் என்பதுபோல புகைபிடிப்பது, மது அருந்துவது, பான் மசாலா போடுவது இந்த மூன்றும் உணவுக்குழாய் புற்றுநோய்க்கு முக்கியக் காரணங்கள். அமில எதிரொழுக்கு நோய் (GERD), இரைப்பை ஏற்றம் (Hiatus hernia) போன்ற பிரச்னை உள்ளவர்களில் பலருக்கு இது வருகிறது. அடுத்து உணவுக்குழாயின் அடிப்பகுதியில் பேரட் உணவுக்குழாய்(Barrett’s esophagus), பிறவிச் சுருக்கம் போன்ற  பிரச்னைகள் காணப்பட்டாலும் இந்தப் புற்றுநோய் வரலாம். அரிதாக ரத்தசோகை கடுமையாக இருப்பவர்களுக்கும், டைலோசிஸ்(Tylosis), அக்கலேசியா(Acchalasia) எனப்படும் பரம்பரை நோய்கள் இருப்பவர்களுக்கும் இது வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

உணவுகள் கவனம்!

நம்மிடம் காணப்படும் தவறான உணவுப்பழக்கமும் உணவுக்குழாய் புற்று ஏற்பட வழி அமைக்கும். எடுத்துக்காட்டாக, காபி/தேநீரை அதிகச் சூடாகக் குடிக்கும் பழக்கம், துரித உணவுப்பழக்கம், கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது போன்றவற்றைச் சொல்லலாம். அதிக இறைச்சி சாப்பிடும் பழக்கமுள்ள கேரளாவில் இந்தப் புற்று உள்ளவர்கள் அதிகம் என்பது இதற்குச் சான்று. உலக அளவில் கூறினால் ஜப்பான், சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், பின்லாந்து போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகமாக உள்ளது. இந்த நாட்டு மக்கள் கொழுப்பு மிகுந்த துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். காய்கறி, பழங்களைக் குறைவாகத்தான் சாப்பிடுகின்றனர்.

அதனால்தான் இந்தப் புற்றுநோய் அவர்களுக்கு சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. இம்மாதிரியான உணவுப்பழக்கம் இப்போது நம்மிடமும் காணப்படுவதால்தான் இந்தப் புற்றுநோய் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்கிறது இந்தியப் புற்றுநோய்த் தடுப்புக் கழகம். இதையும் சொல்ல வேண்டும். ஜப்பான் நாட்டு மக்களுக்கு மீன் ஒரு முக்கிய உணவு. மீனைத் தீயில் சுட்டு கருகலாகச் சாப்பிடும் பழக்கம் அங்கு அதிகம். மீனின் கருகலில் ‘ஹைட்ரோ-கார்பன்’ என்னும் வேதிப்பொருள் உருவாகிறது. இது ஒரு மோசமான புற்றுநோய்க் காரணி. இது உணவுக்குழாயில் பாலாடைபோல் படிந்து, அங்குள்ள தசைகளைத் தின்றுவிடுகிறது. அப்போது உணவுக்குழாயில் அழற்சி ஏற்படுகிறது. இதை உடனே கவனிக்காவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. அதேநேரம் மீனைக் குழம்பாக்கிச் சாப்பிட்டால் இந்த ஆபத்து இல்லை.

எந்த வயதில் வரும்?

சாதாரணமாக இந்தப் புற்றுநோய் 40 வயதுக்கு மேல்தான் வருகிறது. ஆகவே 40 வயதைக் கடந்தவர்களுக்கு உணவை விழுங்கும்போது சிரமம் ஏற்படுமானால் உணவுக்குழாய் புற்று உள்ளதா என பரிசோதித்துக்கொள்வது நல்லது.

அறிகுறிகள் என்ன?

இந்த நோய் உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் புளித்த ஏப்பம், பசி குறைவது, நெஞ்சுக்குள் பந்து சென்று அடைப்பது போன்ற உணர்வு ஏற்படுவது, செரிமானம் குறைவது உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் உண்டாகும். இவற்றில் உடல் எடை குறைவது தவிர மற்ற அறிகுறிகள் எல்லாமே சாதாரணமாக இரைப்பைப் புண்ணிலும் ஏற்படும். ஆகையால், இந்த நோயாளிகள் இரைப்பைப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் அறிகுறிகள் தற்காலிகமாக மறையும். என்றாலும் நோய் மறையாது. பிறகு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்போதுதான் இந்த நோய் உள்ள விவரம் தெரியவரும்.

வேறு அறிகுறிகள் உண்டா?

எதை சாப்பிட்டாலும் தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருக்கும். போகப்போக உணவு, தண்ணீர் எதுவும் விழுங்க முடியாது. குமட்டல், வாந்தி வரும். வாந்தியில் ரத்தம் வரலாம். உணவை விழுங்கும்போது – குறிப்பாக உணவுக்குழாயில் புற்று உள்ள இடத்தை உணவு கடக்கும்போது,  நெஞ்சில் வலி ஏற்படும். பொதுவாக இந்த நோய் உள்ளவர்களுக்கு நடுநெஞ்சில் வலி நிரந்தரமாக இருக்கும். இறுதியில் எச்சில்கூட விழுங்க முடியாது. சமயங்களில் விழுங்கிய எச்சில் எதிர்க்களித்து வந்து மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இதனால் அடிக்கடி சளி பிடித்து இருமல் வரும்.

இது எங்கெல்லாம் பரவும்?

இந்தப் புற்றுநோய் நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமோ உடலில் பிற இடங்களுக்குப் பரவக்கூடிய தன்மை உடையது. பொதுவாக, உணவுக்குழாய்க்கு அருகில் உள்ள நுரையீரலுக்கும் மூச்சுக்குழலுக்கும் நேரடியாகவே பரவிவிடும். ரத்தத்தின் மூலம் கல்லீரல், நுரையீரல், எலும்பு ஆகியவற்றுக்குப் பரவும். நிணநீர் மூலம் கழுத்து, மூச்சுக்குழல், வயிறு ஆகிய பகுதிகளில் உள்ள நிணமுடிச்சுகளுக்குப் பரவும். அப்போது அவை வீங்கிக்கொள்ளும். நோய் முற்றிய நிலையில் இந்த நிணமுடிச்சுகளில் வலி ஏற்படும். பேச்சு வழக்கில் ‘நெறிக்கட்டி வீக்கம் என்று இதைத்தான் சொல்கிறோம்.

என்னென்ன பரிசோதனைகள் இருக்கின்றன?

நோயாளிக்கு பேரியம்(Barium) மாவைக் கரைத்துக் கொடுத்து, குடிக்கச் செய்து, உணவுக்குழாயை எக்ஸ்-ரே எடுத்து நோயைக் கணிப்பது பழைய முறை. இப்போது எண்டோஸ்கோப்பி(Endoscopy) மூலம் உணவுக்குழாயில் உள்ள புற்றுநோயை மருத்துவரே நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்வார். மேலும் அந்தப் பரிசோதனையை மேற்கொள்ளும்போதே புற்றுநோயுள்ள இடத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை வெட்டியெடுத்துத் திசு ஆய்வு(Biopsy) செய்து நோயையும் அதன் வகையையும் உறுதி செய்வார். மேலும், நெஞ்சையும் வயிற்றையும் சி.டி.ஸ்கேன் அல்லது ‘பெட்’ ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயை உறுதி செய்வதும் உண்டு.

என்ன சிகிச்சை?

உணவுக்குழாய் புற்றுநோய்க்கு அது உள்ள ‘புற்று நிலை’யைக் கொண்டு மூன்று வழிகளில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை உணவுக்குழாயில் புற்றுநோய் பாதித்துள்ள பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, பெருங்குடல் பகுதியிலிருந்து சிறு பகுதியை எடுத்து உணவுக்குழலுக்கு மாற்றாகப் பொருத்திவிடுவது ஒரு வழி. இந்த சிகிச்சையை நோயின் ஆரம்பநிலையில் மட்டுமே செய்ய முடியும். புற்றுநோய் முற்றிவிட்டால் இதை மேற்கொள்ள முடியாது. அப்போது ஒரு மாற்று வழி ஏற்பாடு செய்யப்படும். அதாவது நோயாளி உணவு சாப்பிட மட்டும் வழி செய்வதற்காக, வாய் வழியாக ஒரு செயற்கைக் குழாயை (Stent) உணவுக்குழலுக்குள் செலுத்தி, அதைப் புற்று உள்ள பகுதியைக் கடக்கச் செய்து, இரைப்பைக்குள் பொருத்திவிடுவார்கள். இதனை எண்டோஸ்கோப்பி கொண்டு செய்துவிடலாம். இதன் மூலம் நோயாளி உணவைச் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

கதிர்வீச்சு சிகிச்சை

இந்த நோய் வந்துள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை(Radiotherapy)தான் தரப்படுகிறது. ‘லீனியர் ஆக்ஸிலேட்டர்’ அல்லது கோபால்ட் கருவிகள் மூலம் எக்ஸ் கதிர்களை உணவுக்குழலுக்குச் செலுத்தும்போது புற்றுநோய் திசுக்கள் சுருங்கி வலி குறைகிறது. இந்த கதிர்வீச்சு சிகிச்சையை அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தருவார்கள்.

மருத்துவ சிகிச்சை

நுரையீரலில் மட்டுமல்லாமல் உடலில் மற்ற இடங்களில் பரவியுள்ள புற்றுநோய்க்கும் மருந்துகள் செலுத்தப்படும் Chemotherapy சிகிச்சை இது. இந்த சிகிச்சைகள் எல்லாம் முடிந்த பிறகு குறைந்தது 5 வருடங்களுக்குத் தொடர் கவனிப்பும் அவசியம்.

தடுப்பது எப்படி?

புகைபிடிப்பதற்குத் தடை போடுவதும் மதுவுக்கு ‘நோ’ சொல்வதும் பான் மசாலாவைத் தலையைச் சுற்றி வீசுவதும் இந்தப் புற்றுநோய் வருவதைக் கட்டாயம் தடுக்கும். அதிக சூடாகச் சாப்பிடும் பழக்கமும் ஆகாது. அடிக்கடி கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டு, தினமும் காய்கறி பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தைக் கைக்கொண்டால் மிக நல்லது. சரியான உடல் எடையைப் பேணுவதும் முக்கியம். ஆமாம்… மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

(படைப்போம்)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *