ஓய்வூதியத்தை இழக்கும் 21 தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் ஓய்வூதியத்தை இழக்கப்போகும் 21 தமிழ் பேசும் உறுப்பினர்கள் யார் தெரியுமா?
=============================
19 ஆம் திருத்தத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை பயண்படுத்தி திட்டமிட்டபடி இன்று இரவு நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற முடியாத நிலை ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இதில் 21 தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதிய உரிமைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டு காலத்தை முடித்திருக்க வேண்டும் என்பது சட்டவிதி.
அதன்படி, ஓய்வூதிய உரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகளவில் இழக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அக் கட்சியை சேர்ந்த 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய உரிமையை இழக்க நேரிடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பியை சேர்ந்த ஒருவரும் ஓய்வூதிய உரிமைகளை இழக்ககூடுமென தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் எம்பிக்களில் – சாந்தி சிறீஸ்கந்தராசா, சி.சிவமோகன், ஞா.ஸ்ரீநேசன், க.கோடீஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், அங்கயன் இராமநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மயில்வாகனம் திலகராஜ், வேலுக்குமார், அரவிந்தக்குமார் ஆகியோரும்
முஸ்லீம் எம்பிக்களில் – ஆர்.எ.ஹபீஸ், எம்.எச்.சல்மான், மொஹமட் நவாப், மொஹமட் இஸ்மாயில், மொஹமட் நசீர், காதர் மஸ்தான், முஜிபூர் ரஹ்மான், இஷான் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், எஸ்.எம்.மரிக்கார், மொஹமட் மன்சூர் ஆகியோர் ஓய்வூதியத்தை இழக்க உள்ளனர்.
நளீம் லதீப்.
2013 ஆண்டு முதல் பிரதமர் 71500 ரூபாவையும், சபாநாயகர் – 68500 ரூபாவையும், அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் 63500 ரூபாவையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 54285 ரூபாவையும் சம்பளமான பெறுகின்றனர்.
5 வருடத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதி ஓய்வூதியமாக வழங்கப்படும், 15 வருடங்களுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு மூன்றில் இரண்டு பகுதி ஓய்வுதியமாக வழங்கப்படும்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி இன்று நள்ளிரவில் வெளியிடப்பட உள்ளது .