காணாமல் போனவர்களை கண்டுபிடித்த உதய கம்மன்பில

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனக்கூறும் தமிழ் அடிப்படைவாதிகள், அதற்கான சாட்சிகளை இன்னும் முன்வைக்கவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு ஊகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” தமது நாட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கே இணை அனுசரணை வழங்கிய ஒரே நாடு இலங்கை என்ற சாதனையை 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படும்போது ஐக்கிய தேசியக்கட்சி படைத்தது. நல்லிணக்கம் என்ற போர்வையில், இருந்த நல்லிணக்கத்தையும் இழக்கும் வகையிலேயே அப்போதைய ஆளுங்கட்சியின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளதாக கூறும் தமிழ் அடிப்படைவாதிகள் அதற்கான சாட்சிகளை முன்வைக்கவில்லை.
உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல் எங்கே? இன அழிப்பு நடைபெற்றதெனில் அதற்கான ஆதாரங்கள் எங்கே? இவையொன்றும் வெளியிடப்படவில்லை. மாறாக ஊகத்தின் அடிப்படையிலேயே 40 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காணாமல்போயுள்ளனர் எனக் கூறப்படுபவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். ஜெனிவா மாநாடு நடைபெறும்போது ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்துவார்கள்? இவர்கள் யார்? போர்காலத்தில் இலங்கையிலிருந்து தப்பிச்சென்று தஞ்சம் புகுந்தவர்களே இவர்கள்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *