சொகுசு கப்பலில் கொரோனாவால் 4 பேர் பலி!நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிப்பு

டோக்கியோ: ஜப்பானின் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 2 இந்தியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 138 இந்தியர்கள் பயணம் செய்த நிலையில் கொரோனா பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத்தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசானது சீனாவை மட்டுமின்றி பல்வேறு நாடுகளையும் ஆட்டி படைத்து வருகின்றது. வுகானில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருகின்றது. நேற்று 97 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 648 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வைரசினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள பயணிகளில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கப்பலில் இருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நோய் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டப்பட்ட பயணிகள் கப்பலில் இருந்து கடந்த ஓரிரு நாட்களாக வெளியேற்றப்பட்டனர். நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கப்பல் ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஆயிரம் பேர் கப்பலிலேயே தொடர்ந்து தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுமார் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால் நேற்று முன்தினம் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கப்பலில் இருந்த மேலும் 2 இந்தியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “துரதிருஷ்டவசமாக கப்பலில் உள்ள மேலும் 2 இந்திய ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.

‘தென்கொரியாவில் அதிகரிப்பு’
வெளிநாடுகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் தென்கொரியா உள்ளது. இங்கு நேற்று புதிதாக 123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 556 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதித்த இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

‘இத்தாலியில் 2 பேர் பலி’
இத்தாலியில் கொரோனா பாதிப்புக்கு வெள்ளியன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் லோம்பார்டியில் 77 வயது மூதாட்டி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

‘ஈரானில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’
ஈரானில் கொரோனாவிற்கு 5 பேர் பலியான நிலையில் 14 மாகாணங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கலாசார மையங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கு 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கலை மற்றும் சினிமா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘மிகப்பெரிய சுகாதார அவசரநிலை’
கொரோனா வைரசால் இதுவரை 2400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், இதனை நாட்டின் மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று அறிவித்துள்ளார். வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், ‘‘வேகமாக பல இடங்களுக்கு பரவி வரும் நோய் தொற்றை தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் மிகுந்த சிக்கலாக இருக்கிறது’’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, இந்தியாவுக்கான சீன தூதரகம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘சீனாவில் நோய் தொற்று பரவும் சூழலை இந்தியா அமைதியான முறையில் பகுப்பாய்வு செய்து சீனாவுக்கு தேவையான பொருட்களை வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீண்டும் பரஸ்பரம் வர்த்தக உறவு மற்றும் மக்களை பகிர்ந்து கொள்ளுதலை இந்தியா தொடங்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளது.

ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 138 இந்தியர்கள் பயணம் செய்த நிலையில் கொரோனா பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பான் கப்பலில் பயணம் செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 ஆக உயர்ந்துள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *