ஈரானில் கொரோனா வைரஸ்!50 பேர் பலி?

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய  கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 28 நாடுகளில் பரவியிருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,592 பேர் வரை பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 79 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் தொடருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி  வருகின்றன. சீனாவுக்கு விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், ஈரானில், ஷியாக்களின் முக்கிய மதக் கல்வி நகரமாக விளங்கும் குவோம் (Qom) நகரில், இந்த மாதம் மட்டும் 50 பேர் கொரானா தொற்றுக்கு உயிரிழந்து விட்டதாக, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ILNA செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது. இது கடந்த 13 ஆம் தேதி நிலவரம் என்று கூறியுள்ள ILNA, 270 பேர் நோய் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் மற்றும் இத்தாலியில் கொரானா பரவும் வேகம் அதிர்ச்சியும்,  கவலையும் அளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் பல நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அண்டை நாடுகள் தங்களது எல்லைகள் அடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *