கொரோனா பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய நாடுகளில் இலங்கைக்கு ஐந்தாவது இடம்

உலகமே கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தில் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பது குறித்து அறிய ஆர்வம் காட்டியுள்ளனர் மக்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி விவரங்களை தெரிந்துக்கொள்ள இணயத்தில் பல நாடுகளை சேர்ந்த மக்கள் தேடிவருகின்றனர். அந்த வகையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருப்பதாக தெரியவருகின்றது.
இருக்கவே இருக்கிறது எதையுமே கற்றுத்தரும் இணையம்! ஆக, மக்கள் கொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எப்படி பரவுகிறது, அது வராமல் தவிர்ப்பது எப்படி என்பது போன்ற விடயங்களை இணையத்தில் தேடியுள்ளனர்.
அப்படி தேடியதில், உலகத்திலேயே அதிகமாக கொரோனா வைரஸ் குறித்துத் தேடியவர்கள் கனடா நாட்டவர்கள்தான் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்க இணையதளமான Eligibility என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
உலகத்திலேயே கொரோனா வைரஸ் குறித்து கூகுளில் தேடியவர்கள் பட்டியலில் கனேடியர்கள்தான் முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கனடாவில் வாழ்வோரில் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோக, 47 கனேடியர்கள் ஜப்பான் கடல் பகுதியில் நிற்கும் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை, உலகில் மொத்தம் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள 76,000 பேரில், 0.1 சதவிகிதத்திற்கும் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கனேடியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.
கொரோனா வைரஸ் குறித்து இணையத்தில் தேடியவர்களில், பராகுவே நாட்டவர்கள் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் நாட்டவர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இலங்கை இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *